அத்திமரம் சபிக்கப்படுதலும் ஆலயம் மீண்டும் சுத்திகரிக்கப்படுதலும்
கனியற்ற அத்திமரம் சபிக்கப்படுகிறது; ஆலயம் இரண்டாம் முறையாகச் சுத்திகரிக்கப்படுகிறது.
பெத்தானியாவும் எருசலேமும் (திங்கட்கிழமை). மேசியாவின் வல்லமை வெளிப்படும் நாள்
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 21:18–19, 12–13
21:18 காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
19 அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது.
12 இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி, காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து:
13 என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார்.
மாற்கு 11:12–18
11:12 அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
13 அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை. 14 அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள்.
15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து, 16 ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
17 என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
18 அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.
லூக்கா 19:45–48
19:45 பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி:
46 “என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைத் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்” என்றார்.
47 அவர் நாள்தோறும் தேவாலயத்தில் போதகம்செய்துகொண்டிருந்தார். பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும், 48 மக்களெல்லோரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை சார்ந்துகொண்டிருந்தபடியால், அதை எப்படி செய்வதென்று தெரியாதிருந்தார்கள்.
கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விரும்புகிறார்கள்
கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விரும்புவது சீடர்களுக்குப் புதிராக இருக்கிறது. இதனால் இயேசு உள்ளம் கலங்கி, வாழ்வையும் மரணத்தையும் தியாகமாக விளக்குகிறார்; மேலும், தாம் “உயர்த்தப்படுவதன்” மூலம் எல்லோரையும் தம்மிடத்தில் எவ்வாறு இழுத்துக்கொள்வார் என்பதைக் காட்டுகிறார்.
எருசலேம் (திங்கட்கிழமை)
யோவான் 12:20–50
12:20 பண்டிகையில் ஆராதனைசெய்ய வந்தவர்களில் கிரேக்கர்கள் சிலர் இருந்தனர். 21 அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். 22 பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவிற்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவிற்கு அறிவித்தார்கள். 23 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. 24 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும். 25 தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். 26 ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். 27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த நேரத்திலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆனாலும், இதற்காகவே இந்த நேரத்திற்குள் வந்தேன். 28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது. 29 அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30 இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் எனக்காக உண்டாகாமல் உங்களுக்காக உண்டானது. 31 இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். 32 பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்றார். 33 இயேசு தாம் எவ்விதமாக மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். 34 மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். 35 அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடம் இருக்கும்; இருளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி ஒளி உங்களோடு இருக்கும்போது நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறான். 36 ஒளி உங்களோடு இருக்கும்போது நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு, ஒளியிடம் விசுவாசமாக இருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
37 அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
38 “கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?
கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது”
என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
39 ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்:
40 அவர்கள் கண்களினால் பார்க்காமலும்,
இருதயத்தினால் உணராமலும்,
குணப்படாமலும் இருப்பதற்கும்,
நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும்,
அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி,
அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.
41 ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். 42 ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள். 43 அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள். 44 அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான். 45 என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான். 46 என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன். 47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். 48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். 49 நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். 50 அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
கனியற்ற அத்திமரம் பட்டுப்போனதாகக் காணப்படுகிறது
பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்குச் செல்லும் வழியில். (செவ்வாய்க்கிழமை)
மத்தேயு 21:20–22
21:20 சீடர்கள் அதைப் பார்த்து: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். 21 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மாற்கு 11:19–26
11:19 மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள்.
20 அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.
21 பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான். 22 இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். 23 யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். 25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள். 26 நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.
லூக்கா 21:37–38
21:37 அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38 மக்களெல்லோரும் அவருடைய போதகத்தைக் கேட்பதற்காக அதிகாலமே தேவாலயத்திற்கு வருவார்கள்.