பகுதி 11: எருசலேமில் இறுதிப் பொதுப் பணி

பாடுகளின் வாரத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை முதல் அவ்வாரத்தின் செவ்வாய்க்கிழமை வரை, கி.பி. 30 (அல்லது கி.பி. 29) வசந்த காலம். பஸ்காவுக்குச் சற்று முன்பு

இயேசு எருசலேமுக்கு அருகிலுள்ள பெத்தானியாவுக்கு வருகிறார்

வெள்ளிக்கிழமை பிற்பகல்

கி.பி. 30 அல்லது 29

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோவான் 11:55–12:1, 9–11

11:55 யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். 56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். 57 பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

12:1 பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார்.

9 அப்பொழுது யூதர்களில் திரளான மக்கள் அவர் அங்கே இருக்கிறதை அறிந்து, இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின லாசருவைப் பார்க்கும்படியாகவும் வந்தார்கள். 10 லாசருவினால் யூதர்களில் அநேகர்போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததினால், 11 பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனை செய்தார்கள்.

இயேசு மேசியாவாக எருசலேமில் வெற்றிப் பவனியாக நுழைகிறார்

ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் இரட்சகர் சென்ற இடங்களையும் அளித்த போதனைகளையும் இங்கே காண்கிறோம்: யூதர்களும் ரோமர்களும் நடத்திய விசாரணைகளின்போது அவர் பேசிய சில வார்த்தைகளைத் தவிர, இத்துடன் அவரது பொதுப் பணி முடிவடைகிறது. இதற்குப் பின்பு அவரது போதனைகள் அனைத்தும் அவருடைய சீடர்களுக்கே அளிக்கப்படுகின்றன.

பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்று திரும்புதல் (ஞாயிற்றுக்கிழமை). மேசியாவாகத் தம்மை வெளிப்படுத்தும் நாள்

மத்தேயு 21:1–3, 6–7, 4–5, 8–11, 14–17

21:1 அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:

2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.

3 ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

6 சீடர்கள்போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,

7 கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.

4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக,

கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு,

உன்னிடத்தில் வருகிறார் என்று

சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” என்று,

5 தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

8 திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.

9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

10 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது, நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 11 அதற்கு மக்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

14 அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார்.

15 அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து, கோபமடைந்து, 16 அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார். 17 அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார்.

மாற்கு 11:1–11

11:1 இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:

2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.

3 ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.

4 அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.

5 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள்.

6 இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.

7 அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.

8 அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள். 9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;

10 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

11 அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார்.

லூக்கா 19:29–44

19:29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகிலிருந்த பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபமாக வந்தபோது, தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:

30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள், அதிலே நுழையும்போது மனிதர்களில் ஒருவனும் ஒருபோதும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.

31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

32 அனுப்பப்பட்டவர்கள்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே பார்த்தார்கள்.

33 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதன் உரிமையாளர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

34 அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

35 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

36 அவர் போகும்போது, அவர்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள். 37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்திற்கு அருகில் வந்தபோது திரளான கூட்டமாகிய சீடர்களெல்லோரும் தாங்கள் பார்த்த எல்லா அற்புதங்களையுங்குறித்து சந்தோஷப்பட்டு,

38 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜா போற்றப்படத்தக்கவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று மிகுந்த சத்தமாக தேவனைப் புகழ்ந்தார்கள்.

39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர் அவரைப் பார்த்து: “போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்” என்றார்கள். 40 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே பேசும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 41 அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது, 42 “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது. 43 உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி, 44 உன்னையும் உன்னிலுள்ள உன் மக்களையும் தரைமட்டமாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்றார்.

யோவான் 12:12–19

12:12 அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு,

13 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா போற்றப்படத்தக்கவர்” என்று ஆர்ப்பரித்தார்கள்.

14 அல்லாமலும்:

“சீயோன் குமாரத்தியே, பயப்படாதே,

உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி,

15 இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார்.

16 இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

17 அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள்.

18 அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள்.

19 அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலக மக்கள் அனைவரும் அவருக்குப் பின்னே சென்றனர் என்றார்கள்.