இயேசு பார்வையற்ற பர்திமேயுவையும் அவனுடைய தோழனையும் குணமாக்குகிறார்

எரிகோவில்

கி.பி. 29 முதல் 30 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 20:29–34

20:29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.

30 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

31 அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.

32 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.

33 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.

34 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

மாற்கு 10:46–52

10:46 பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான்.

48 அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.

49 இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். 50 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான்.

51 இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.

52 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.

லூக்கா 18:35–43

18:35 பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

36 மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.

37 நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். 38 முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.

39 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.

40 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:

41 நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

42 இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

43 உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

இயேசு சகேயுவைக் காணச் செல்கிறார்

இயேசு சகேயுவைக் காணச் சென்று, மினாக்களைப் பற்றிய உவமையைச் சொல்லி, எருசலேமுக்குப் புறப்படுகிறார்.

எரிகோ

லூக்கா 19:1–28

19:1 இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது, 2 வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன், 3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல், 4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். 5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். 6 அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான். 7 அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். 8 சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான். 9 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே. 10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

11 அவர்கள் இவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் எருசலேமுக்கு அருகிலிருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாக வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்: 12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்திற்குப் போகப் புறப்பட்டான். 13 புறப்படும்போது, அவன் தன் வேலைக்காரர்களில் பத்துபேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்து பொற்காசுகளைக் கொடுத்து: நான் திரும்பிவரும் வரைக்கும் இதைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள் என்று சொன்னான். 14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் இராஜாவாக இருக்கிறது எங்களுக்கு விருப்பமில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே பிரதிநிதிகளை அனுப்பினார்கள். 15 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். 16 அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் பத்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். 17 எஜமான் அவனைப் பார்த்து: நல்லது உத்தம வேலைக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாக இருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். 18 அப்படியே இரண்டாம் வேலைக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய பொற்காசுகளினால் ஐந்துபொற்காசுகள் லாபம் கிடைத்தது என்றான். 19 அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான். 20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன். 21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான். 22 அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே, 23 பின்னை ஏன் நீ என் பொற்காசை வங்கியிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடு பெற்றுக்கொள்ளுவேனே என்று சொல்லி; 24 அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான். 25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள். 26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு விருப்பமில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய விரோதிகளை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

28 இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.