வரி குறித்துப் பரிசேயர்களும் ஏரோதியர்களும் இயேசுவைச் சிக்கவைக்க முயலுதல்
இராயனுக்கு வரி செலுத்துவது குறித்துப் பரிசேயர்களும் ஏரோதியர்களும் இயேசுவைச் சிக்கவைக்க முயலுகிறார்கள்.
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 22:15–22
22:15 அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,
16 தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 17 ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
18 இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
19 வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
20 அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
21 இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
மாற்கு 12:13–17
12:13 அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
14 அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள்.
15 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
16 அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள்.
17 அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
லூக்கா 20:20–26
20:20 அவர்கள் நேரம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்திற்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாக நடிக்கிற ஒற்றர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
21 அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாகப் பேசி உபதேசிக்கிறீரென்றும், பட்சபாதமில்லாமல் தேவனுடைய வழிமுறைகளை உண்மையாகப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22 இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
23 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
24 ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.
25 அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். 26 அவர்கள் அவரை மக்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன பதிலைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாக இருந்தார்கள்.
உயிர்த்தெழுதல் குறித்த சதுசேயர்களின் புதிர்
சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் குறித்து இயேசுவிடம் ஒரு புதிரான கேள்வியைக் கேட்கிறார்கள்.
தேவாலயப் பிராகாரத்தில். (செவ்வாய்க்கிழமை)
மத்தேயு 22:23–33
22:23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
24 போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
25 எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
26 அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
27 எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
28 ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
30 உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
31 மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? 32 தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
33 மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மாற்கு 12:18–27
12:18 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து:
19 போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
20 இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான்.
21 இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது. 22 ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள்.
23 எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
25 மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள்.
26 மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
27 அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார்.
லூக்கா 20:27–40
20:27 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து:
28 போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாக இருந்து சந்ததியில்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம்செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
29 சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான்.
30 பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான். 31 மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள்.
32 எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
33 இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள்.
34 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். 35 மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
36 அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதர்களுக்கு நிகரானவர்களுமாக, தேவனுடைய மக்களுமாக இருப்பார்கள்.
37 அல்லாமலும் மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியென்றால், யெகோவாவை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38 அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார். 39 அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் அதைக்கேட்டு: போதகரே, நன்றாகச் சொன்னீர் என்றார்கள். 40 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை.