நியாயப்பிரமாணத்தில் வல்லுநரான ஒரு பரிசேயன் இயேசுவிடம் கேள்வி கேட்டல்
சதுசேயர்களின் தோல்வியைக் கண்டு பரிசேயர்கள் மகிழ்கிறார்கள்; நியாயப்பிரமாணத்தில் வல்லுநரான ஒரு பரிசேயன் இயேசுவிடம் நியாயப்பிரமாணத்தைப் பற்றி ஒரு கேள்வியைக் கேட்கிறான்.
தேவாலயப் பிராகாரத்தில். (செவ்வாய்க்கிழமை)
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 22:34–40
22:34 அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 35 அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
37 இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
38 இது முதலாம் பெரிய கட்டளை. 39 இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. 40 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
மாற்கு 12:28–34
12:28 வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான்.
29 இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை.
31 இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார். 32 அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான். 34 அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
தாவீதின் குமாரன் குறித்துத் தம் எதிரிகளை இயேசு மௌனமாக்குதல்
மேசியா தாவீதின் வம்சத்தில் வந்தவராக இருந்தும் தாவீதுக்குக் கர்த்தராக இருப்பது எப்படி என்ற கூர்மையான கேள்வியால் இயேசு தம் எதிரிகளை மௌனமாக்குகிறார்; இதைக் கண்டு மக்கள் கூட்டம் மகிழ்கிறது.
தேவாலயப் பிராகாரத்தில். (செவ்வாய்க்கிழமை)
மத்தேயு 22:41–46
22:41 பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
42 கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
43 அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? 44 நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
45 தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். 46 அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
மாற்கு 12:35–37
12:35 இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36 நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும்
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று
கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று
தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.
37 தாவீதே, அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்.
லூக்கா 20:41–44
20:41 அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
42 நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று,
43 யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று
தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே.
44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க,
அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார்.