ரோமப் படைவீரர்கள் இயேசுவைப் பரிகாசம் செய்கிறார்கள்
வெள்ளிக்கிழமை, காலை 6 முதல் 9 மணிக்குள்
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 27:27–30
27:27 அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
28 அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி,
29 முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, 30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள்.
மாற்கு 15:16–19
15:16 அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து,
17 சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:
18 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, 19 அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
சிலுவைக்குச் செல்லும் வழியில் இயேசு
இயேசு கொல்கொதாவிலுள்ள சிலுவைக்குச் செல்லும் வழியில் (வியா டொலரோசா).
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முன்பு
மத்தேயு 27:31–34
27:31 அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
32 போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள்.
33 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது,
34 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
மாற்கு 15:20–23
15:20 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
21 சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
லூக்கா 23:26–33
23:26 அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27 திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள். 28 இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். 29 இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30 அப்பொழுது மலைகளைப் பார்த்து:
எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து:
எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31 பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால்,
பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
32 குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
33 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
யோவான் 19:17
19:17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.