சிலுவையில் முதல் மூன்று மணிநேரங்கள்
வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மதியம்வரை (இயேசுவின் மூன்று வார்த்தைகள்; இயேசுவின் அங்கிக்காகப் போர்வீரர்கள் சீட்டுப்போடுகிறார்கள்; சிலுவையின்மேல் உள்ள மேல்விலாசம்; மக்கள்கூட்டமும், ஆலோசனைச் சங்கமும், போர்வீரர்களும், கிறிஸ்துவின் இருபக்கத்திலும் இருந்த இரண்டு கள்ளர்களுங்கூட இயேசுவைப் பரியாசம்பண்ணுகிறார்கள்)
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 27:35–44
27:35 அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
36 அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
37 அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள்.
38 அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
39 அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: 40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள்.
41 அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: 42 மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
43 தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
44 அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
மாற்கு 15:24–32
15:24 அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.
25 அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள். 26 அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
27 இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள். 28 அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது.
29 அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே. 30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்.
31 அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
32 நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.
லூக்கா 23:34, 38, 35–37, 39–43
23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
38 இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
35 மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36 போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37 நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான். 40 மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42 இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43 இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 19:18, 23–24, 19–22, 25–27
19:18 அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
23 படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது. 24 அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
19 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது. 20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
21 அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். 22 பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
25 இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார். 27 பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.