இரண்டாம் முறையாகப் பிலாத்துவின் முன் இயேசு
வெள்ளிக்கிழமை சூரிய உதயத்தை நெருங்கும் நேரம் (யோவான் 19:14)
கிறிஸ்துவைச் சிலுவையில் அறையவேண்டும் என்ற ஆலோசனைச் சங்கத்தின் கோரிக்கைக்குப் பிலாத்து மெதுவாகவும், தயக்கத்துடனும், பயத்துடனும் இணங்குகிறான்.
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 27:15–26
27:15 காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது.
16 அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
17 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
18 அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
20 பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். 21 தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
22 பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்.
23 தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள்.
24 கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 25 அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
26 அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான்.
மாற்கு 15:6–15
15:6 பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.
7 கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். 8 மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
10 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
11 பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
12 பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
13 அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
14 அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
15 அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
லூக்கா 23:13–25
23:13 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து, 14 அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. 15 உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16 எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். 17 பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18 மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள். 19 அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். 21 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
22 அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23 அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24 அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25 கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
யோவான் 18:39–19:16
18:39 பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான்.
40 அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான்.
19:1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான். 2 படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி: 3 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். 4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான். 5 இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
6 பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
7 யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து, 9 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை. 10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். 11 இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார். 12 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். 13 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான். 14 அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
15 அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
16 அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.