காட்டிக்கொடுத்த யூதாவின் மனவருத்தமும் தற்கொலையும்
தேவாலயத்திலும் எருசலேமின் மதில்களுக்கு வெளியே ஓர் இடத்திலும். வெள்ளிக்கிழமை காலை
கி.பி. 30 அல்லது 29
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 27:3–10
27:3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: 4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். 5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். 6 பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, 7 ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். 8 இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. 9 இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, 10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
முதன்முறையாகப் பிலாத்துவின் முன் இயேசு
எருசலேம். வெள்ளிக்கிழமை அதிகாலை
மத்தேயு 27:2, 11–14
27:2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
11 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
12 பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
13 அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
14 அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
மாற்கு 15:2–5
15:2 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3 பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
5 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
லூக்கா 23:1–5
23:1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: 2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
3 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
5 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
யோவான் 18:28–38
18:28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள். 29 ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான். 30 அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். 31 அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். 32 தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். 33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான்.
34 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். 35 பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். 36 இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார். 37 அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
38 அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை.
காற்பங்கு தேசாதிபதியான ஏரோது அந்திப்பாவின் முன் இயேசு
எருசலேம். வெள்ளிக்கிழமை அதிகாலை
லூக்கா 23:6–12
23:6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து, 7 அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான். 8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, 9 அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. 10 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள். 11 அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான். 12 முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.