பேதுரு தன் கர்த்தரை மூன்று முறை மறுதலிக்கிறார்

தொடர் விசாரணைகளின்போது பிரதான ஆசாரியரின் இல்லத்து முற்றம். வெள்ளிக்கிழமை விடியற்காலத்திற்கு முன்னும் விடியும் நேரத்திலும்

கி.பி. 30 அல்லது 29

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 26:58, 69–75

26:58 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து, உள்ளே நுழைந்து, முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான்.

69 அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.

70 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான். 71 அவன், வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள்.

72 அவனோ: அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து, மறுபடியும் மறுதலித்தான்.

73 சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.

74 அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.

75 அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.

மாற்கு 14:54, 66–72

14:54 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.

66 அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,

67 குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள்.

68 அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது.

69 வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.

70 அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.

71 அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான்.

72 உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.

லூக்கா 22:55–62

22:55 அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.

56 அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.

57 அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான்.

58 சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான்.

59 ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.

60 அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது.

61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து, 62 வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.

யோவான் 18:15–18, 25–27

18:15 சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான். 16 பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.

17 அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான். 18 குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

25 சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான்.

26 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான்.

27 அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது.

விடிந்தபின் ஆலோசனை சங்கத்தினர்கள் இயேசுவைக் குற்றவாளி என்று முறைப்படி தீர்ப்பளிக்கிறார்கள்

வெள்ளிக்கிழமை

மத்தேயு 27:1

27:1 விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,

மாற்கு 15:1

15:1 அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.

லூக்கா 22:66–71

22:66 விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: 67 நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். 68 நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள். 69 இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார். 70 அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். 71 அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.