இயேசு முதலில் அன்னாவால் விசாரிக்கப்படுகிறார்

இயேசு முதலில் முன்னாள் பிரதான ஆசாரியரான அன்னாவால் விசாரிக்கப்படுகிறார்.

வெள்ளிக்கிழமை விடிவதற்கு முன்பு

யூதர்களின் விசாரணையும் அதைச் சுற்றி நடந்தவையும்.

கி.பி. 30 அல்லது 29

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோவான் 18:13–14, 19–23

18:13 முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான். 14 மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.

19 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். 20 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. 21 நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். 22 இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். 23 இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

காய்பாவும் ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் குற்றவாளியாகத் தீர்க்கிறார்கள்

காய்பாவாலும் ஆலோசனைச் சங்கத்தாலும் இயேசு அவசரமாக விசாரிக்கப்பட்டுக் குற்றவாளியாகத் தீர்க்கப்படுகிறார்; அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி அடிக்கிறார்கள்.

பிரதான ஆசாரியரான காய்பாவின் இல்லம். வெள்ளிக்கிழமை விடியற்காலத்திற்கு முன்

மத்தேயு 26:57, 59–68

26:57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள்.

59 பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;

60 ஒருவரும் கிடைக்கவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:

61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவனை நிந்தித்தான்; இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே.

66 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள்.

67 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:

68 கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

மாற்கு 14:53, 55–65

14:53 இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள்.

55 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை.

56 அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை.

57 அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,

58 அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள். 59 அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை.

60 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.

61 அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.

62 அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். 63 பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா? 64 தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

லூக்கா 22:54, 63–65

22:54 அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான்.

63 இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து,

64 அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,

65 மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.

யோவான் 18:24

18:24 பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான்.