கிறிஸ்து புறக்கணிக்கப்படுவது முன்னறிவிக்கப்படுகிறது
கிறிஸ்து புறக்கணிக்கப்படுவதையும் அவரது சபையின் இறுதியான உயர்வையும் குறித்த ஒரு தீர்க்கதரிசனம்.
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவா சொல்கிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களின்காரணமாக நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களின்காரணமாக உங்களுடைய தாய் அனுப்பிவிடப்பட்டாள். 2 நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுமொழி கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கமுடியாதபடிக்கு என் கரம் குறுகிவிட்டதோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கடிந்துகொள்ளுதலினாலே கடலை வற்றச்செய்து, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாற்றமெடுக்கின்றது. 3 நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, சணலாடையால் அவைகளின் மூடுதிரையாக்குகிறேன். 4 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். 5 யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. 6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7 யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன். 8 என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். 9 இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும். 10 உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக. 11 இதோ, நெருப்பைக் கொளுத்தி, நெருப்புப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜூவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.
51:1 நீதியைப் பின்பற்றி யெகோவாவை தேடுகிறவர்களாகிய நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட கிணற்றின் குழியையும் நோக்கிப்பாருங்கள். 2 உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன். 3 யெகோவா சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான இடங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், அதின் காலியான இடத்தைக் யெகோவாவின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் பாடலின் சத்தமும் அதில் உண்டாயிருக்கும். 4 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் மக்களே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை மக்களின் வெளிச்சமாக நிறுவுவேன். 5 என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் மக்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். 6 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை. 7 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். 8 பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுரோமத்தைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும். 9 எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ? 10 மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய கடலை வற்றிப்போகச்செய்ததும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ? 11 அப்படியே யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும். 12 நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனிதனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின யெகோவாவை மறக்கிறதற்கும் நீ யார்? 13 துன்பம் செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய கடுங்கோபத்திற்கு எப்போதும் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? துன்பம் செய்கிறவனுடைய கடுங்கோபம் எங்கே? 14 சிறைப்பட்டுப்போனவன் துரிதமாக விடுதலையாவான்; அவன் குழியிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை. 15 உன் தேவனாயிருக்கிற யெகோவா நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாக கடலைக் குலுக்குகிற சேனைகளின் யெகோவா என்கிற நாமமுள்ளவர். 16 நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் மக்கள்கூட்டமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.
17 எழும்பு, எழும்பு, யெகோவாவுடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய். 18 அவள் பெற்ற மக்கள் அனைவருக்குள்ளும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த மகன்கள் எல்லோரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை. 19 இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உன்னை ஆறுதல்படுத்துகிறவன் யார்? பாழாகுதலும், அழிவும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உன்னை ஆறுதல்படுத்துவேன்? 20 உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள். 21 ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடிக்காமல் வெறிகொண்டவளே, நீ கேள். 22 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய மக்களுக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்கிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் கடுங்கோபத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. 23 உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்று சொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.
52:1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையை அணிந்துகொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார உடைகளை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. 2 தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன மகளாகிய சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு. 3 விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று யெகோவா சொல்கிறார். 4 முற்காலத்தில் என் மக்கள் தங்கும்படி எகிப்திற்குப் போனார்கள்; அசீரியனும் காரணமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார். 5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் மக்கள் வீணாகக் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை பரிகாசம் செய்கிறார்கள்; எப்போதும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று யெகோவா சொல்கிறார். 6 இதினிமித்தம், என் மக்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்கிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று யெகோவா சொல்கிறார். 7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறாரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தியாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. 8 உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாகக் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், யெகோவா சீயோனைத் திரும்பிவரச்செய்யும்போது, அதைக் கண்ணாரக் காண்பார்கள். 9 எருசலேமின் பாழான இடங்களே, முழங்கி ஏகமாகக் கெம்பீரித்துப் பாடுங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். 10 எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவா தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லோரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். 11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; யெகோவாவுடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். 12 நீங்கள் துரிதமாகப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; யெகோவா உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்னே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.