விக்கிரக ஆராதனை கண்டிக்கப்படுகிறது
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், யெகோவாவுடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள். 2 அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் யெகோவா என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாக இருக்கிறார்கள். 3 ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை ஆரம்பம்முதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளை உடனடியாகச் செய்தேன், அவைகள் நடந்தன. 4 நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன். 5 ஆகையால்: என் சிலை அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த உருவமும், நான் வார்ப்பித்த சிலையும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன். 6 அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன். 7 அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை. 8 நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம் செய்வாய் என்பதையும், தாயின் கர்ப்பத்திலிருந்தே நீ மீறுகிறவனென்று பெயர் பெற்றதையும் அறிந்திருக்கிறேன். 9 என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னை அழிக்காதபடி நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாக இருப்பேன். 10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன். 11 என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. 13 என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். 14 நீங்களெல்லோரும் கூடிவந்து கேளுங்கள்; யெகோவாவுக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்? 15 நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரச்செய்தேன்; அவன் வழி வாய்க்கும். 16 நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு இரகசியமாகப் பேசவில்லை; அது உண்டான காலத்திலிருந்தே அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ யெகோவாவாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். 17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்கிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே. 18 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி கடலின் அலைகளைப்போலும் இருக்கும். 19 அப்பொழுது உன் சந்ததி மணலைப் போலவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் துகள்களைப் போலவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும். 20 பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; யெகோவா தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாகக் கூறிப் பிரபலப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரவரை வெளிப்படுத்துங்கள் என்கிறார். 21 அவர் அவர்களை வனாந்திரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகம் இருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கச்செய்தார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது. 22 துன்மார்க்கர்களுக்குச் சமாதானம் இல்லையென்று யெகோவா சொல்கிறார்.
மேசியா தமது மக்களிடம் பேசுகிறார்
1 தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற மக்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் யெகோவா என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கும்போது என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார். 2 அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைக் கூர்மையான அம்பாக்கி, என்னைத் தமது அம்புகளை வைக்கும் பையிலே மூடிவைத்தார். 3 அவர் என்னை நோக்கி: நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். 4 அதற்கு நான்: வீணாக உழைக்கிறேன், வீணாகவும் பயனற்றதாகவும் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன். 5 யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் யெகோவா தமக்கு ஊழியக்காரனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் யெகோவாவுடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார். 6 யாக்கோபின் வம்சங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் முடிவுவரைக்கும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை தேசங்களுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார். 7 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய யெகோவா, மனிதர்களால் அசட்டைசெய்யப்பட்டவரும், தேசங்களால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள யெகோவா நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்.
8 பின்னும் யெகோவா: அனுக்கிரகக் காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சொந்தமாக்கிக்கொள்ளவும்; 9 கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளியே வாருங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். 10 அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். 11 என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். 12 இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் அஸ்வான் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். 13 வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; மலைகளே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார். 14 சீயோனோ: யெகோவா என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்கிறாள். 15 ஒரு பெண் தன் கர்ப்பத்தின் குழந்தைக்கு இரங்காமல், தன் மகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. 16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. 17 உன் மகன்கள் துரிதமாக வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப் புறப்பட்டுப்போவார்கள். 18 உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லோரும் ஏகமாகக்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லோரையும் ஆபரணமாக அணிந்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்று யெகோவா உரைக்கிறார். 19 அப்பொழுது உன் வனாந்திரங்களும், உன் பாழான இடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிமக்களின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள். 20 பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச்சொல்வார்கள். 21 அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் தனிமையாக விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்வாய். 22 இதோ, தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்தி, மக்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் மகன்களை பெரும் கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் மகள்கள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். 23 ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் வளர்க்கும் தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் யெகோவா, எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய். 24 பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கமுடியுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்கமுடியுமோ? 25 என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களுடன் நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்வேன். 26 உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே சாப்பிடக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான அனைவரும் அறிந்துகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.