சிறையிருப்பும் பாபிலோனின் அழிவும் முன்னறிவிக்கப்படுகின்றன
பாபிலோனியச் சிறையிருப்பையும் பாபிலோனின் அழிவையும் குறித்த ஒரு தீர்க்கதரிசனம்.
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் சிலைகள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள், இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். 2 அவைகள் ஏகமாகக் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும். 3 யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். 4 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுவரை நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். 5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படி என்னை ஒப்பிடுவீர்கள்? 6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, கொல்லனுடனே கூலி பொருத்திக்கொள்கிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். 7 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் இடத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்திரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை காப்பாற்றியதுமில்லை. 8 இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள். 9 முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. 10 முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, 11 வேகமாக பறக்கிற ஒரு பறவையைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனிதனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்செய்தேன், அதைச் செய்துமுடிப்பேன். 12 கடின இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். 13 என் நீதியைச் சமீபிக்கச்செய்கிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கொடுப்பேன்.
47:1 பாபிலோனின் கன்னிப்பெண்ணாகிய மகளே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் மகளே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ கர்வமுள்ளவள் என்றும் சுகசெல்வி என்றும் இனி அழைக்கப்படுவதில்லை. 2 இயந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் நிர்வாணத்தொடையுமாக ஆறுகளைக் கடந்துபோ. 3 உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் அவமானம் காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன். 4 எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய யெகோவா என்பது. 5 கல்தேயரின் மகளே, நீ அந்தகாரத்திற்குள் பிரவேசித்து மவுனமாக உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை. 6 நான் என் மக்களின்மேல் கடுங்கோபமடைந்து, என் சொந்தமானதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வைக்காமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி, 7 என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வைக்காமலும், அதின் முடிவை நினைக்காமலும்போனாய். 8 இப்பொழுதும் சுகசெல்வியே, கவலையில்லாமல் வாழ்கிறவளே: நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்ததி சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்கிறவளே, நான் சொல்கிறதைக் கேள். 9 சந்ததி சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரே நாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான மந்திரவித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாக உன்மேல் வரும். 10 உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய். 11 ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று உனக்குத் தெரியாது; உனக்குத் துன்பம் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்கு உடனடியாக உண்டாகும் அழிவு உன்மேல் வரும். 12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் மாயவித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ பயன்படுத்து; அவைகளால் உனக்குப் பயனோ, பலனோ உண்டாகுமா என்று பார்ப்போம். 13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் சோதிடர்களும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னைத் தப்புவித்துக் காப்பாற்றட்டும். 14 இதோ, அவர்கள் பதரைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் உயிரை நெருப்புத்தழலினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. 15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்செய்தாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை காப்பாற்றுவார் இல்லை.