விக்கிரக ஆராதனையின் மதியீனமும் தேவனை அறியாதவர்களின் மனமாற்றமும்

கி.மு. 710

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏசாயா 44–45

1 இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள். 2 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே. 3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். 4 அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள். 5 ஒருவன், நான் யெகோவாவுடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பெயரை சூட்டிக்கொள்வான்; ஒருவன், தான் யெகோவாவுடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் பெயரைச் சூட்டிக்கொள்வான்.

6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்கிறார். 7 ஆரம்பகாலத்து மக்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும். 8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கச்செய்ததும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன். 9 விக்கிரகங்களை உருவாக்குகிற அனைவரும் வீணர்கள்; அவர்களால் விரும்பப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். 10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, சிலையை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? 11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லோரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லோரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாகத் திகைத்து வெட்கப்படுவார்கள். 12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடிக்காமல் களைத்துப்போகிறான். 13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்திற்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராயத்தினால் அதை வகுத்து, மனித சாயலாக மனிதரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டிவைக்கிறான். 14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருத மரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோக மரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். 15 மனிதனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டாக்கி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு சிலையையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். 16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டு, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; 17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை காப்பாற்றவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். 18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. 19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்து சாப்பிட்டேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை. 20 அவன் சாம்பலை மேய்கிறான்; ஏமாற்றப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே தவறு அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான். 21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் ஊழியக்காரன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. 22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். 23 வானங்களே, களித்துப் பாடுங்கள்; யெகோவா இதைச் செய்தார்; பூமியின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.

24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான யெகோவா சொல்கிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற யெகோவா; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். 25 நான் கட்டுக்கதைக்காரரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, குறிசொல்கிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகச் செய்கிறவர். 26 நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் பிரதிநிதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான இடங்களை எடுப்பிப்பவர். 27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர். 28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்கிறவர் நான்.

45:1 யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது: 2 நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். 3 உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படிக்கு, 4 வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, இரகசிய இடங்களில் இருக்கிற பொக்கிஷங்களையும், மறைவிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு பெயர் சூட்டினேன். 5 நானே யெகோவா, வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. 6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவர் இல்லை. 7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். 8 வானங்களே, மேலிருந்து பொழியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழிவதாக; பூமி திறந்து, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன். 9 மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ? 10 தகப்பனை நோக்கி: ஏன் பிறக்கச்செய்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றெடுத்தாய் என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ, 11 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். 12 நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். 13 நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களை விலையில்லாமலும் லஞ்சமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். 14 எகிப்தின் வருமானமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், உயரமான ஆட்களாகிய சபேயரின் வியாபார லாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார். 15 இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் உண்மையாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர். 16 சிலைகளை உண்டாக்குகிற அனைவரும் வெட்கப்பட்டு அவமானமடைந்து, ஏகமாகக் கலங்கிப்போவார்கள். 17 இஸ்ரவேலோ, யெகோவாவாலே நிலையான காப்பாற்றுதலினால் காப்பாற்றப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள். 18 வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: நானே யெகோவா, வேறொருவர் இல்லை. 19 நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; வீணாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற யெகோவா. 20 தேசங்களினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாகச் சேருங்கள்; தங்கள் மரத்தாலான சிலையைச் சுமந்து, காப்பாற்றமாட்டாத தெய்வத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். 21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. 22 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. 23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே வாக்குக் கொடுத்திருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். 24 யெகோவாவிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாக எரிச்சல் கொண்டிருக்கிற அனைவரும் வெட்கப்படுவார்கள். 25 இஸ்ரவேலின் சந்ததியாகிய அனைவரும் யெகோவாவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.