கிறிஸ்துவின் வருகை முன்னறிவிக்கப்படுகிறது

கிறிஸ்துவின் வருகையையும் யூதர்களின் மீட்சியையும் குறித்த ஒரு தீர்க்கதரிசனம்.

கி.மு. 710 முதல் 699 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏசாயா 42–43

1 இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 2 அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கச்செய்யவுமாட்டார். 3 அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். 4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும்வரை தடுமாறுவதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும். 5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது: 6 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், 7 கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாகவும் தேசங்களுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். 8 நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன். 9 ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

10 கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். 11 வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. 12 யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. 13 யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார். 14 நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். 15 நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள தாவரங்களையெல்லாம் வாடச்செய்து, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகச்செய்வேன். 16 குருடர்களை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச்செய்து, அவர்களைக் கைவிடாமலிருப்பேன். 17 சித்திரவேலையான சிலைகளை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட உருவங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்று சொல்கிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.

18 செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள். 19 என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? யெகோவாவுடைய ஊழியக்காரனையல்லாமல் குருடன் யார்? 20 நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனிக்காமல் இருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான். 21 யெகோவா தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார். 22 இந்த மக்களோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள். 23 உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்? 24 யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவம்செய்து விரோதித்த யெகோவா அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்திற்குச் செவிகொடாமலும் போனார்களே. 25 இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், போரின் வலிமையையும் வரச்செய்து, அவர்களைச்சூழ அக்கினிஜூவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களை எரித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள்.

43:1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். 2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது. 3 நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய யெகோவா; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். 4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனிதர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக மக்களையும் கொடுப்பேன். 5 பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரச்செய்து, உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பேன். 6 நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும், 7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன். 8 கண்களிருந்தும் குருடர்களாயிருக்கிற மக்களையும், காதுகளிருந்தும் செவிடர்களாயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரச்செய்யுங்கள். 9 சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும். 10 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. 11 நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. 12 நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார். 13 நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?

14 நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார். 15 நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். 16 கடலிலே வழியையும் திரளான தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, 17 இரதங்களையும் குதிரைகளையும் படைகளையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படச்செய்து, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்செய்கிற யெகோவா சொல்கிறதாவது: 18 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். 19 இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். 20 நான் தெரிந்துகொண்ட என் மக்களின் தாகத்திற்கு வனாந்திரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், ஆந்தைக் குஞ்சுகளும் என்னைக் கனப்படுத்தும். 21 இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். 22 ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனம்சலித்துப்போனாய். 23 உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனப்படுத்தவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன். 24 நீ எனக்குப் பணங்களால் சுகந்தப்பட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் கொழுப்பினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய். 25 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினைக்காமலும் இருப்பேன். 26 நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல். 27 உன் ஆதிதகப்பன் பாவம்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்தார்கள். 28 ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்திற்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.