கிறிஸ்துவின் தாழ்வும் உயர்வும் முன்னறிவிக்கப்படுகின்றன
கிறிஸ்துவின் தாழ்வும் பாடுகளும் உயர்வும் முன்னறிவிக்கப்படுகின்றன.
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
13 இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். 14 மனிதனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு கொடூரம் அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். 15 அப்படியே, அவர் அநேகம் தேசங்களின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; தாங்கள் கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
53:1 எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3 அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். 4 உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். 5 நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6 நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார். 7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறக்காமல் இருந்தார். 8 துன்பத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து பிரிக்கப்பட்டார்; என் மக்களின் மீறுதலின்காரணமாக அவர் வாதிக்கப்பட்டார். 9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் இறந்தபோது ஐசுவரியவானுடன் இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 10 யெகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்கு உட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், யெகோவாவுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக கருதப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்காரணமாக அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
சபையின் வளர்ச்சியும் வெற்றியும் முன்னறிவிக்கப்படுகின்றன
1 பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாகப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், தனியாக இருக்கும் பெண்ணுடைய பிள்ளைகள் அதிகம் என்று யெகோவா சொல்கிறார். 2 உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் குடியிருப்புகளின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. 3 நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் தேசங்களைச் சொந்தமாக்கிக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். 4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; வெட்கப்படாதே, நீ அவமானமடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினைக்காமலிருப்பாய். 5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். 6 கைவிடப்பட்டு மனம்நொந்தவளான பெண்ணைப்போலவும், இளம்பிராயத்தில் திருமணம்செய்து விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் யெகோவா அழைத்தார் என்று உன் தேவன் சொல்கிறார். 7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். 8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று யெகோவாவாகிய உன் மீட்பர் சொல்கிறார். 9 இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போல் இருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபம்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். 10 மலைகள் விலகினாலும், மலைகள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற யெகோவா சொல்கிறார். 11 சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவு இல்லாதவளே, இதோ, நான் உன் கற்களைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, 12 உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன். 13 உன் பிள்ளைகளெல்லோரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். 14 நீதியினால் உறுதியாக்கப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை. 15 இதோ, உனக்கு விரோதமாகக் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாகக் கூடுகிறார்களோ, அவர்கள் உன் ஆளுகைக்குள்ளாக வருவார்கள். 16 இதோ, கரிநெருப்பை ஊதி, தன் வேலைக்கான ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனையும் நான் படைத்தேன்; கெடுத்து நாசமாக்குகிறவனையும் நான் படைத்தேன். 17 உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று யெகோவா சொல்கிறார்.
நற்செய்தியின் வளமான ஆசீர்வாதங்கள்
நற்செய்தியின் ஆசீர்வாதங்களுடைய நிறைவும் மேன்மையும்.
1 ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களிடம் வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் வாங்கிக்கொள்ளுங்கள். 2 நீங்கள் உண்மையான உணவு அல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் ஏன் செலவழிக்கவேண்டும்? நீங்கள் எனக்குக் கவனமாகச் செவிகொடுத்து, சிறப்பானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பொருட்களினால் மகிழ்ச்சியாகும். 3 உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 4 இதோ, அவரை மக்கள்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், மக்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். 5 இதோ, நீ அறியாதிருந்த தேசத்தை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த தேசம் உன் தேவனாகிய யெகோவாவின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்; 6 யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். 7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர். 8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார். 9 பூமியைக்காட்டிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைக்காட்டிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைக்காட்டிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. 10 மழையும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் சாப்பிடுகிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 11 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாக என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். 12 நீங்கள் மகிழ்ச்சியாகப் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, சமாதானமாகக் கொண்டு போகப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாக முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். 13 முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு மரம் முளைக்கும்; நெருஞ்சி முட்செடிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது யெகோவாவுக்குப் புகழ்ச்சியாகவும், அழியாத நிலையான அடையாளமாகவும் இருக்கும்.
56:1 யெகோவா சொல்கிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. 2 இப்படிச்செய்கிற மனிதனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். 3 யெகோவாவைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: யெகோவா என்னைத் தம்முடைய மக்களைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லாதிருப்பானாக. 4 என் ஓய்வு நாட்களை அனுசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் யெகோவா சொல்கிறது என்னவென்றால்: 5 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் மகன்களுக்கும் மகள்களுக்கு உரிய இடத்தையும் புகழ்ச்சியையும் விட, உத்தம இடத்தையும் புகழ்ச்சியையும் கொடுப்பேன் என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு கொடுப்பேன். 6 யெகோவாவைச் சேவிக்கவும், யெகோவாவுடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி அனுசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய தேசத்தார் அனைவரையும், 7 நான் என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழச்செய்வேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல மக்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். 8 இஸ்ரவேலில் தள்ளப்பட்டவர்களைச் சேர்க்கிற யெகோவாவாகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்.