யூதேயாவின் விக்கிரக ஆராதனைக்காகப் பேரிடர்கள் முன்னறிவிக்கப்படுகின்றன
யூதேயாவின் விக்கிரக ஆராதனைக்காகவும் மாய்மாலத்திற்காகவும் அதன்மீது வரவிருக்கும் பேரிடர்களைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பு.
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
9 வெளியில் வசிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, அழிக்க வாருங்கள். 10 அவனுடைய காவற்காரர் எல்லோரும் ஒன்றும் அறியாத குருடர்கள்; அவர்களெல்லோரும் குரைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாகப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்கிறவர்கள், தூக்கப் பிரியர்; 11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். 12 வாருங்கள், திராட்சைரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
57:1 நீதிமான் இறந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. 2 நேர்மையாக நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள். 3 நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் விபச்சாரிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே நெருங்கிவாருங்கள். 4 நீங்கள் யாரைப் பரியாசம்செய்கிறீர்கள்? யாருக்கு விரோதமாக வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்செய்கிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ? 5 நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், தெய்வச்சிலைகளுடன் மோக அக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள். 6 பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை ஊற்றி, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? 7 நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் படுக்கையை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். 8 கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் படுக்கையை அகலமாக்கி, அவர்களுடன் உடன்படிக்கைசெய்தாய்; அவர்களுடைய படுக்கையைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். 9 நீ தைலத்தைப் பூசிக்கொண்டு மொளேக் என்கிற விக்கிர தெய்வத்திடம் போகிறாய்; உன் வாசனைத்திரவியங்களை மிகுதியாக்கி, உன் பிரதிநிதிகளைத் தூரத்திற்கு அனுப்பி, உன்னைப் பாதாளம்வரை தாழ்த்துகிறாய். 10 வழிதூரமானதால் சோர்ந்துபோகிறாய்; அது வீணென்று நீ சொல்கிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ பெலவீனமடையவில்லை. 11 நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்கிறாயே; நீ என்னை நினைக்காமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய். 12 உன் நீதியையும் உன் செயல்களையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது. 13 நீ கூப்பிடும்போது, உன் தெய்வச்சிலைகளின் கூட்டம் உன்னைக் காப்பாற்றட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோகும்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் பரிசுத்த மலையிலே என்னை ஆராதிக்கிறவனாயிருப்பான்.
14 வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும். 15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன். 16 நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாக இருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் படைத்த ஆத்துமாக்களும், என் முகத்திற்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே. 17 நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே. 18 அவர்களுடைய வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் கொடுப்பேன். 19 தூரமாயிருக்கிறவர்களுக்கும் அருகில் இருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனை படைக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று யெகோவா சொல்கிறார். 20 துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமைதலாயிருக்கமுடியாமல், அதின் தண்ணீர் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. 21 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்கிறார்.
58:1 சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் மக்களுக்கு அவர்களுடைய மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்களுடைய பாவங்களையும் தெரிவி. 2 தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற தேசத்தாரைப்போல் அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள். 3 நாங்கள் உபவாசிக்கும்போது நீர் கவனிக்காமல் இருக்கிறதென்ன? நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் ஆசையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள். 4 இதோ, வழக்குக்கும் தர்க்கத்திற்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்களுடைய கூக்குரலை உயரத்திலே கேட்கச்செய்வதற்காக, இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசிக்காதீர்கள். 5 மனிதன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் சணல் ஆடையிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் யெகோவாவுக்குப் பிரியமான நாளென்றும் சொல்வாய்? 6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணைப்புகளை தளர்த்துகிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், 7 பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம். 8 அப்பொழுது விடியற்கால வெளிச்சத்தைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; யெகோவாவுடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். 9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா மறுமொழி கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்வார். நுகத்தடியையும், குற்றம்சாட்டுதலையும், அநியாய வார்த்தைகளையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, 10 பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் இருள் மத்தியானத்தைப் போலாகும். 11 யெகோவா எப்பொழுதும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை பெலமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். 12 உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த இடங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். 13 என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்குப் பிரியமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு பிரியமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், யெகோவாவுடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக கருதுவாயானால், 14 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிசெய்து, உன் தகப்பனாகிய யாக்கோபுக்குச் சொந்தமானவைகளால் உன்னைப் போஷிப்பேன்; யெகோவாவுடைய வாய் இதைச் சொல்லிற்று.
59:1 இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் யெகோவாவுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 2 உங்களுடைய அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்குகிறது; உங்களுடைய பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடுக்க முடியாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. 3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது. 4 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். 5 கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் வலைகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் உடைக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும். 6 அவைகளின் நெசவுகள் ஆடைகளுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் செயல்களாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்களுடைய செயல்கள் அக்கிரம செயல்கள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது. 7 அவர்களுடைய கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதற்கு விரைகிறது; அவர்களுடைய நினைவுகள் அக்கிரம நினைவுகள்; பாழாகுதலும் அழிவும் அவர்களுடைய வழிகளிலிருக்கிறது. 8 சமாதான வழியை அறியமாட்டார்கள்; அவர்களுடைய நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியமாட்டான். 9 ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம். 10 நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண் இல்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழான இடங்களில் இருக்கிறோம். 11 நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்திற்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமானது. 12 எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி சொல்கிறது; எங்கள் மீறுதல்கள் எங்களுடன் இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். 13 யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்து, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கச்செய்தோம். 14 நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாக நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்துசேரமுடியாமற்போகிறது. 15 சத்தியம் தள்ளுபடியானது; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் யெகோவா பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.