சபையின் எதிர்கால மகிமையும் வெற்றியும்
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
16 ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்செய்கிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. 17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் தலைக்கவசத்தைத் தமது தலையில் அணிந்து, நீதி நிலைநாட்டுதல் என்னும் ஆடைகளை உடுப்பாக அணிந்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். 18 செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார். 19 அப்பொழுது சூரியன் மறையும் திசைதொடங்கி யெகோவாவின் நாமத்திற்கும், சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் எதிரி வரும்போது, யெகோவாவுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார். 20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று யெகோவா சொல்கிறார். 21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.
60:1 எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது. 2 இதோ, இருள் பூமியையும், காரிருள் மக்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 3 உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். 4 சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். 5 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும். 6 ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான், ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் அனைவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, யெகோவாவின் துதிகளைப் பிரபலப்படுத்துவார்கள். 7 கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கீகரிக்கப்பட்டதாக என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். 8 மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்கு வேகமாகவருகிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்? 9 தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும். 10 அந்நியமக்கள் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு மனமிரங்கினேன். 11 உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும். 12 உன்னைச் சேவிக்காத தேசமும் ராஜ்யமும் அழியும்; அந்த தேசங்கள் நிச்சயமாகப் பாழாகும். 13 என் பரிசுத்த ஸ்தானத்தைச் அலங்கரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு மரங்களும், பாய்மர மரங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதபீடத்தை மகிமைப்படுத்துவேன். 14 உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைசெய்த அனைவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் யெகோவாவுடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள். 15 நீ வெறுக்கப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். 16 நீ தேசங்களின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, யெகோவாவாகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்னை விடுவிப்பவரென்றும் அறிந்துகொள்வாய். 17 நான் வெண்கலத்திற்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரச்செய்து, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரர்களை நீதியுள்ளவர்களுமாக்குவேன். 18 இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களைப் பாதுகாப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்வாய். 19 இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாக இராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசிக்காமலும், யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். 20 உன் சூரியன் இனி மறைவதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; யெகோவாவே உனக்கு நிலையான வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும். 21 உன் மக்கள் அனைவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும் குடிமக்களும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் செயல்களுமாயிருப்பார்கள். 22 சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த தேசமுமாவான்; யெகோவாவாகிய நான் ஏற்றகாலத்தில் இதை வேகமாக நடப்பிப்பேன்.
61:1 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், 2 யெகோவாவுடைய அநுக்கிரக வருடத்தையும், நம்முடைய தேவன் நீதியைநிலைப்படுத்தும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்செய்யவும், 3 சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாக அலங்காரத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் யெகோவா தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் மரங்கள் எனப்படுவார்கள். 4 அவர்கள் நீண்டநாட்களாக பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, முற்காலத்தில் அழிக்கப்பட்டவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாக இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். 5 அந்நியமக்கள் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அன்னியமக்கள் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சைத்தோட்டக்காரருமாக இருப்பார்கள். 6 நீங்களோ யெகோவாவின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய ஊழியக்காரர் என்பார்கள்; நீங்கள் தேசங்களின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள். 7 உங்களுடைய வெட்கத்திற்குப் பதிலாக இரண்டு மடங்கு பலன் வரும்; அவமானத்திற்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான பங்கை அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். 8 யெகோவாவாகிய நான் நியாயத்தை விரும்பி, அநியாயத்தினாலும், கொள்ளைப்பொருளினால் செலுத்தப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்; நான் அவர்கள் செயலை உண்மையாக்கி, அவர்களுடன் நிரந்தர உடன்படிக்கை செய்வேன். 9 அவர்களுடைய சந்ததியானது தேசங்களின் நடுவிலும், அவர்கள் பிள்ளைகள் மக்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற அனைவரும் அவர்கள் யெகோவாவால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள். 10 யெகோவாவுக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணமகன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணமகள் நகைகளினால் தன்னைச் அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் பாதுகாப்பின் ஆடைகளை எனக்குப்போட்டு, நீதியின் சால்வையை எனக்கு அணிவித்தார். 11 பூமி தன் தாவரங்களை முளைக்கச்செய்வது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைக்கச்செய்வது போலவும், யெகோவாவாகிய ஆண்டவர் எல்லா தேசங்களுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கச்செய்வார்.