சபையின் எதிர்கால மகிமையும் வெற்றியும் (continued)
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 சீயோனுக்காகவும் எருசலேமுக்காகவும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் பாதுகாப்பு எரிகிற தீப்பந்தத்தைப்போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன். 2 தேசங்கள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; யெகோவாவுடைய வாய் சொல்லும் புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய். 3 நீ யெகோவாவுடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். 4 நீ இனிக் கைவிடப்பட்டவள் எனப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசம் எனப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; யெகோவா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். 5 வாலிபன் கன்னிகையை திருமணம்செய்வதுபோல, உன் மக்கள் உன்னை திருமணம்செய்வார்கள்; மணமகன் மணமகளின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். 6 எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுவதும் இரவுமுழுவதும் ஒருக்காலும் மவுனமாயிராத காவற்காரர்களைக் கட்டளையிடுகிறேன். யெகோவாவைப் பிரஸ்தாபம்செய்கிறவர்களே, நீங்கள் அமைதியாக இருக்ககூடாது. 7 அவர் எருசலேமை உறுதிப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரை அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள். 8 இனி நான் உன் தானியத்தை உன் எதிரிகளுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சைரசத்தை அந்நிய தேசத்தார் குடிப்பதுமில்லையென்று யெகோவா தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் வாக்குக்கொடுத்தார். 9 அதைச் சேர்த்தவர்களே அதை சாப்பிட்டு யெகோவாவை துதிப்பார்கள்; அதைத் தயாரித்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள். 10 வாசல்கள் வழியாக நுழையுங்கள், நுழையுங்கள்; மக்களுக்கு வழியை ஒழுங்குபடுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; மக்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள். 11 நீங்கள் மகளாகிய சீயோனை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, யெகோவா பூமியின் கடைசிவரைக்கும் கூறுகிறார். 12 அவர்களைப் பரிசுத்த மக்களென்றும், யெகோவாவால் காப்பாற்றப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.
63:1 ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த ஆடைகளுடையவராகவும், மகத்துவமாக அணிந்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாகப் பேசி காப்பாற்ற வல்லவராகிய நான்தானே. 2 உம்முடைய ஆடைகள் சிவப்பாகவும், ஆலையை மிதிக்கிறவனுடைய ஆடைகளைப்போலவும் இருக்கிறதென்ன? 3 நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். 4 நீதியைநிலைப்படுத்தும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை விடுவிக்கும் வருடம் வந்தது. 5 நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு பாதுகாப்பாகி, என் கடுங்கோபமே என்னைத் தாங்கியது. 6 நான் என் கோபத்திலே மக்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கச்செய்தேன்.
7 யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன். 8 அவர்கள் என் மக்கள்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார். 9 அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார். 10 அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார். 11 ஆகிலும் அவர் ஆரம்பநாட்களையும், மோசேயையும், தம்முடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் கடலிலிருந்து ஏறச்செய்தவர் இப்பொழுது எங்கே? 12 அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்திய புகழ்ச்சியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து, 13 ஒரு குதிரை வனாந்திரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கச்செய்தவர் எங்கே? 14 யெகோவாவுடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறச்செய்தார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள புகழ்ச்சியை உண்டாக்கும்படி உம்முடைய மக்களை நடத்தினீர். 15 தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மனஉருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ? 16 தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; யெகோவாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது ஆரம்பகாலமுதல் உம்முடைய நாமம். 17 யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும். 18 பரிசுத்தமுள்ள உமது மக்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் எதிரிகள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள். 19 நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை.
64:1 ஆ, உமது நாமத்தை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கும், தேசங்கள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், 2 தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி, உருக்கும் அக்கினி எரிவதைப்போலவும், நெருப்பு தண்ணீரைப் பொங்கச் செய்வதைப்போலவும், மலைகள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும். 3 நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் மலைகள் உருகிப்போயின. 4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. 5 மகிழ்ச்சியாக நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம். 6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கிழிந்த ஆடையைப்போல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்களுடைய அக்கிரமங்கள் எங்களைக் காற்றைப்போல் அடித்துக்கொண்டுபோகிறது. 7 உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்வதற்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களின்காரணமாக எங்களைக் கறையச்செய்கிறீர். 8 இப்பொழுதும் யெகோவாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல். 9 யெகோவாவே, அதிகமாகக் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய மக்களே. 10 உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்திரமாயின; சீயோன் வனாந்திரமாயிற்று; எருசலேம் பாழாய்க் கிடக்கிறது. 11 எங்கள் முன்னோர்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் நெருப்பிற்கு இரையாகி, இன்பமான எங்களுடைய இடங்களெல்லாம் பாழாயின. 12 யெகோவாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாக எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?