சபையின் எதிர்கால மகிமையும் வெற்றியும் (continued)
கி.மு. 710
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய பெயரை அறியாதிருந்த தேசத்தை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். 2 நலமல்லாத வழியிலே தங்கள் எண்ணங்களின்படி நடக்கிற முரட்டாட்டமான மக்களைநோக்கி நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன். 3 அந்த மக்கள் என் சந்நிதியிலே எப்பொழுதும் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, 4 பிரேதக்குழிகளுக்கு அருகில் உட்கார்ந்து, பாழான இடங்களில் இரவுதங்கி, பன்றியிறைச்சியை சாப்பிட்டு, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் குழம்பை வைத்திருந்து: 5 நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள். 6 இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் தண்டிப்பேன். 7 உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்களுடைய முன்னோர்களுடைய அக்கிரமங்களுக்கும் ஏற்றவிதத்தில் அவர்கள் மடியிலே தண்டிப்பேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே போடுவேனென்று யெகோவா சொல்கிறார். 8 யெகோவா சொல்கிறது என்னவென்றால்: ஒரு திராட்சைக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்கிறபடி, நான் என் ஊழியக்காரருக்காக அனைத்தையும் அழிக்கவிடாமல் செய்வேன். 9 யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சொந்தமாக்குபவரையும் எழும்பச்செய்வேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, என் ஊழியக்காரர்கள் அங்கே குடியிருப்பார்கள். 10 என்னைத் தேடுகிற என் மக்களுக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கு மாட்டுமந்தைகள் தங்குமிடமாகவும் இருக்கும். 11 ஆனாலும் யெகோவாவை விட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் என்னும் தெய்வத்திற்குப் பந்தியை ஆயத்தம்செய்து, மேனி என்னும் தெய்வத்திற்குப் பானபலியை நிறைய ஊற்றுகிறவர்களே, 12 உங்களை நான் பட்டயத்திற்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுமொழி கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள். 13 ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். 14 இதோ, என் ஊழியக்காரர்கள் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனவியாதியினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள். 15 நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் பெயரை சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; யெகோவாவாகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறு பெயரைச் சூட்டுவார். 16 அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே வாக்குக்கொடுக்கிறவன் சத்திய தேவன் பெயரில் வக்குக்கொடுப்பான்; முந்தின துன்பங்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோனது.
17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. 18 நான் படைக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் மக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கிறேன். 19 நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் மக்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. 20 அங்கே இனி குறைந்த ஆயுள் உள்ள சிறுவனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் இருக்கமாட்டார்கள்; நூறு வயதுசென்று மரணமடைகிறவனும் வாலிபனென்று கருதப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். 21 வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள். 22 அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள். 23 அவர்கள் வீணாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதுமில்லை; அவர்களும், அவர்களுடன்கூட அவர்களுடைய வாரிசும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். 24 அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். 25 ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி பாம்பிற்கு இரையாகும்; என் பரிசுத்த மலையெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடு உண்டாக்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார்.
66:1 யெகோவா சொல்கிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டது? 2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். 3 மாட்டை வெட்டுகிறவன் மனிதனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் சிலையை போற்றுகிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது. 4 நான் கூப்பிட்டும் மறுமொழி கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினால், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரச்செய்வேன். 5 யெகோவாவுடைய வசனத்திற்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர்கள், யெகோவா மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாக காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள். 6 நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது எதிரிகளுக்கு பாடம்கற்பிக்கிற யெகோவாவுடைய சத்தந்தானே. 7 பிரசவவேதனைப்படுவதற்குமுன் பெற்றெடுத்தாள், கர்ப்பவேதனை வருவதற்குமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 8 இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்திற்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு தேசம் ஒரே சமயத்தில் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒரே சமயத்தில் வேதனைப்பட்டும், தன் மகன்களைப் பெற்றும் இருக்கிறது. 9 பெறச்செய்கிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று யெகோவா சொல்கிறார்; பிரசவிக்கச்செய்கிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்கிறார். 10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லோரும் அவளுடன் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவளுக்காக துக்கித்திருந்த நீங்களெல்லோரும் அவளுடன் மிகவும் மகிழுங்கள். 11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்; 12 யெகோவா சொல்கிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், தேசங்களின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். 13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். 14 நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது யெகோவாவுடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய எதிரிகளிடத்தில் அவருடைய கோபமும் தெரியவரும். 15 இதோ, தம்முடைய கோபத்தை கடுங்கோபமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை நெருப்புத்தழலாகவும் செலுத்தக் யெகோவா அக்கினியுடனும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களுடனும் வருவார். 16 யெகோவா அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லோருடனும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலைசெய்யப்பட்டவர்கள் அநேகராயிருப்பார்கள். 17 தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராகச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொல்கிறார். 18 நான் அவர்களுடைய செயல்களையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் எல்லா தேசத்தாரையும் பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களையுங் ஒன்றாகச் சேர்க்கும்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள். 19 நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் புகழ்ச்சியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற மக்களின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர்கள் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை தேசங்களுக்குள்ளே அறிவிப்பார்கள். 20 இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரர் எல்லோரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், சரக்கு வண்டிகளின்மேலும், கோவேறு கழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல தேசங்களிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள யெகோவாவுக்குக் காணிக்கையாக என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள் என்று யெகோவா சொல்கிறார். 21 அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று யெகோவா சொல்கிறார். 22 நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் பெயரும் நிற்குமென்று யெகோவா சொல்கிறார். 23 அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான அனைவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார். 24 அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாகப் பாதகம்செய்த மனிதர்களுடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய நெருப்பு அணையாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான அனைவருக்கும் அருவருப்பாயிருப்பார்கள்.