நற்செய்தியின் உடன்படிக்கையைவிட நியாயப்பிரமாணம் தாழ்ந்தது
பவுல் பழைய ஏற்பாட்டிலிருந்து ஓர் எடுத்துக்காட்டைக் கூறி, நற்செய்தியின் உடன்படிக்கையைவிட நியாயப்பிரமாணம் தாழ்ந்தது என்பதைக் காட்டி, தனது வேண்டுகோளைத் தொடர்கிறார்.
கி.பி. 51
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
21 நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள். 22 ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையான பெண்ணுக்கும் மற்றொருவன் சுதந்திரமான பெண்ணுக்கும் பிறந்தவன். 23 அடிமையானவளுக்குப் பிறந்தவன் சரீரத்தின்படி பிறந்தான், சுதந்திரமுள்ளவளுக்குப் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். 24 இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே. 25 ஆகார் என்பது அரபிதேசத்தில் உள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு அடையாளம்; ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிறாளே. 26 மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள். 27 அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது. 28 சகோதரர்களே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம். 29 ஆனாலும் சரீரத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. 30 அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுதந்திரமுள்ளவளுடைய மகனோடு வாரிசாக இருப்பதில்லை; ஆகவே, அடிமையானவளையும், அவளுடைய மகனையும் வெளியே தள்ளு என்று சொல்லுகிறது. 31 இப்படியிருக்க, சகோதரர்களே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாக இல்லாமல், சுதந்திரமுள்ளவளுக்கே பிள்ளைகளாக இருக்கிறோம்.
நியாயப்பிரமாணம் முழுவதற்கும் கீழ்ப்படியக் கடமைப்பட்டவர்கள்
இரட்சிப்பிற்காக யூத நியாயப்பிரமாணத்தைச் சார்ந்திருப்பவர்கள் அனைவரும் கிறிஸ்தவ அருளாட்சியின் ஆசீர்வாதத்தைத் தாங்களே இழந்து, நியாயப்பிரமாணம் முழுவதற்கும் கீழ்ப்படியக் கடமைப்பட்டவர்களாகிறார்கள் என்று பவுல் உறுதியாகக் கூறுகிறார். நற்செய்தியின் ஆவிக்குரிய மார்க்கம் வேண்டுகிற நற்பண்புகளையும் நற்குணங்களையும் நடைமுறைப்படுத்தும்படி அவர் அவர்களை வலியுறுத்துகிறார். மோசேயின் நியாயப்பிரமாணம் கண்டனம் செய்த ஒழுக்கக்கேடுகளைத் தவிர்க்க அவர்கள் கவனமாக இருக்கவேண்டும்; கிறிஸ்தவர்களிடையே மிகுந்த எரிச்சலையும் பொறாமையையும் உண்டாக்கும் வீண்பெருமை மனப்பான்மையையும் தனிச்சிறப்புப் பெறும் ஆசையையும் அடக்கவேண்டும்.
1 ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள். 2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன். 4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள். 5 நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். 6 கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும். 7 நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? 8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை. 9 புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும். 10 நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான். 11 சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. 12 உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும். 13 சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள். 14 உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். 15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
16 பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள். 17 சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது. 18 ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை. 19 சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை. 24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25 நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம். 26 வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம்.
பவுல் கிறிஸ்தவ அன்பை வலியுறுத்துகிறார்
பவுல் கிறிஸ்தவ அன்பைக் காட்டும்படி அவர்களை வலியுறுத்துகிறார். அவர்களுடைய சொந்த பலவீனங்களையும், அனைவரும் தங்கள் செயல்களுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டியிருப்பதால் அவற்றை ஆராய்ந்து பார்க்கவேண்டிய தேவையையும், ஊழியத்தை ஆதரிப்பதற்கும் மனிதகுலம் முழுவதின் தேவைகளை, குறிப்பாக நமது சக கிறிஸ்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பங்களிக்கவேண்டிய கடமையையும் இதற்கு அடிப்படையாகக் காட்டுகிறார்.
1 சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு. 2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். 3 ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று நினைத்தால், தன்னைத்தானே ஏமாற்றுகிறவன் ஆவான். 4 அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும். 5 அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. 6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும். 7 ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8 தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாமல் இருந்தால் சரியான நேரத்தில் அறுப்போம். 10 ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம்.
பவுல் இயேசுவின் தழும்புகளைச் சுமக்கிறார்
யூதமதத்திற்காக வைராக்கியம் கொண்டவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவில்லை என்றும், தாங்களே துன்புறுத்தலுக்குத் தப்பிக்கொள்வதற்காக மட்டுமே தங்களால் மனமாற்றம் அடைந்தவர்கள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்று விரும்பினார்கள் என்றும் கலாத்தியர்களுக்கு நினைவூட்டிப் பவுல் முடிக்கிறான். மறுபுறம், அப்படிப்பட்ட சுயநலமான நோக்கங்களால் தான் அசைக்கப்பட முடியாது என்று பவுல் அறிவிக்கிறான், ஏனென்றால் கர்த்தராகிய இயேசுவுக்காகத் தான் பட்ட பாடுகளின் தழும்புகளைத் தன் சரீரத்தில் சுமந்திருக்கிறான். பரிசுத்தம் மட்டுமே தேவனிடத்தில் மதிப்புடையது என்று அவன் சாட்சி கூறுகிறான். சபையின்மேல் ஆசீர்வாதம் உண்டாகும்படி அவன் ஜெபிக்கிறான்.
11 என் கையெழுத்தாக எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள். 12 சரீரத்தின்படி நல்லவர்களைப்போலக் காணப்படவிரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கு உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறார்கள். 13 விருத்தசேதனம்பண்ணியிருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்களுடைய சரீரத்தைக்குறித்துப் பெருமைப்பாராட்டும்படி நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள். 14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே அல்லாமல் வேறொன்றையும்குறித்துப் பெருமைபாராட்டாமல் இருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்திற்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். 15 கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம். 16 இந்தக் கட்டளையின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும், இரக்கமும் உண்டாயிருப்பதாக. 17 இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காமல் இருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளங்களை நான் என் சரீரத்திலே அணிந்துகொண்டிருக்கிறேன். 18 சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென்.