கலாத்தியர்கள் தங்கள் ஆரம்ப விசுவாசத்தைக் கைவிடுகிறார்கள்
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் அறியப்படாத ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும் வரங்களாலும் புதிய அருளாட்சிமுறை அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்தும், அந்தப் புதிய அருளாட்சிமுறை இரட்சிப்புக்குப் போதாது என்று எண்ணித் தங்கள் விசுவாசத்தின் ஆரம்ப அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டதற்காகப் பவுல் கலாத்தியர்களைக் கண்டிக்கிறார்.
கி.பி. 51
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 புத்தியில்லாத கலாத்தியர்களே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்களுடைய கண்களுக்குமுன் தெளிவாக உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. 2 ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்? 3 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது சரீரத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இவ்வளவு புத்தி இல்லாதவர்களா? 4 இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே. 5 அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்?
ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறார்
தேவனுடைய வாக்குத்தத்தங்களின்மீது வைத்த விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட ஆபிரகாமின் உதாரணத்தைக் கொண்டு பவுல் தமது போதனையின் உண்மையை நிரூபிக்கிறார்.
6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது. 7 ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். 8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது. 9 அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 10 நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. 11 நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. 12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான். 13 மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார். 14 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது.
15 சகோதரர்களே, மனிதர்களின் முறைகளின்படிச் சொல்லுகிறேன்; மனிதர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடு எதையும் கூட்டுகிறதுமில்லை. 16 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே. 17 ஆகவே, நான் சொல்லுகிறது என்னவென்றால், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன்னமே உறுதிப்பண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருடங்களுக்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது, வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்காது. 18 அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
மோசேயின் நியாயப்பிரமாணம் ஏன் கொடுக்கப்பட்டது
கிறிஸ்து பிறக்கவிருந்த இனமான யூதர்களை, பிறமதத்தவர்களின் விக்கிரக வழிபாட்டுப் பழக்கங்களிலிருந்தும் சடங்குகளிலிருந்தும் காத்து, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியாவைப் பற்றிய நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் அவர்களைப் பயிற்றுவிப்பதே மோசேயின் நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்று பவுல் அறிவிக்கிறார்.
19 அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது. 20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே. 21 அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. 22 அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. 23 ஆகவே, விசுவாசம் வருகிறதற்கு முன்பே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாக நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். 24 இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது. 25 விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.
26 நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே. 27 ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே. 28 யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள். 29 நீங்கள் கிறிஸ்துவுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தினால் வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.
அவர்கள் மீண்டும் அடிமைத்தனத்திற்குத் திரும்புவார்களோ என்று பவுல் அஞ்சுகிறார்
பவுல் இன்னொரு எடுத்துக்காட்டின் மூலம் நியாயப்பிரமாணத்தின் நோக்கத்தை விளக்குகிறார்; விசுவாசத்திற்கு வந்த யூதர்களும் யூதரல்லாதவர்களும் தங்களை மீண்டும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்திக்கொள்ள விரும்புவதைக் கண்டிக்கிறார். இதனால் அவர்களைக் குறித்து அவர் அஞ்சுகிறார்.
1 பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை. 2 தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காப்பாளருக்கும் வீட்டு விசாரணைக்காரர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். 3 அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் இந்த உலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்தோம். 4 நாம் புத்திரசுவிகாரத்தை அடைவதற்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 5 காலம் நிறைவேறினபோது, பெண்ணிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். 6 மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார். 7 ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய்.
8 நீங்கள் தேவனை அறியாமல் இருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களாக இல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தீர்கள். 9 இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலன் இல்லாததும் வெறுமையானதுமான அந்த வழிபாடுகளுக்கு நீங்கள் மீண்டும் திரும்பி, மீண்டும் அவைகளுக்கு அடிமைகளாவதற்கு விரும்புகிறது ஏன்? 10 நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருடங்களையும் கடைபிடித்து வருகிறீர்களே. 11 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாகப் போனதோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.
பவுல் அவர்களுடைய முந்தைய வைராக்கியத்தைச் சுட்டிக்காட்டி வேண்டுகிறார்
பவுல் யூதர்களுடைய முந்தைய வைராக்கியத்தையும் தன்மீது அவர்கள் கொண்டிருந்த அன்பையும் சுட்டிக்காட்டி அவர்களிடம் வேண்டுகிறார்.
12 சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை. 13 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் என்னுடைய சரீர பலவீனத்தினிமித்தம் முதலாம்முறை உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன். 14 அப்படி இருந்தும், என் சரீரத்தில் இருக்கிற பெலவீனம் உங்களுக்கு சோதனையாக இருந்தாலும் நீங்கள் என்னை வெறுக்காமலும், தள்ளிவிடாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன். 16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ? 17 அவர்கள் வைராக்கியத்தோடு உங்களைத் தேடுகிறார்கள்; ஆனாலும் நல்லமனதோடு அப்படிச் செய்யாமல், நீங்கள் என்னைவிட்டுவிட்டு, அவர்களை வைராக்கியத்தோடு பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறார்கள். 18 நல்லக் காரியத்திற்காக, நான் உங்களோடு இருக்கும்பொழுது மட்டுமில்லை, எப்பொழுதும் வைராக்கியம் கொள்வது நல்லதுதான். 19 என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரைக்கும் உங்களுக்காக மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்; 20 உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுது உங்களிடம் வந்து, வேறுவிதமாகப் பேச விரும்புகிறேன்.