பிலிப்பியிலிருந்து தெசலோனிக்கேவுக்கு
பிலிப்பியிலிருந்து அம்பிபோலி மற்றும் அப்பொலோனியா வழியாகத் தெசலோனிக்கேவுக்கு; அங்கு யாசோன் அவர்களை எதிர்க்கிறார்.
கி.பி. 50
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:1–9
1 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்கு வந்தார்கள்; அங்கே யூதர்களுக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது. 2 பவுல் தன் வழக்கத்தின்படியே அங்குபோய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி, 3 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் வேதவாக்கியங்களிலிருந்து காண்பித்தான். 4 அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கர்களில் அநேகரும், கனம்பெற்ற பெண்களில் அநேகரும் விசுவாசித்து, பவுல் சீலாவிடம் சேர்ந்துகொண்டார்கள். 5 விசுவாசிக்காத யூதர்கள் வைராக்கியத்தோடு பொல்லாத மனிதர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, பட்டணத்தில் கலவரம் உண்டாக்கி, யாசோனுடைய வீட்டைச் சுற்றிவளைத்து, அவர்களைப் பட்டணத்து மக்களிடம் இழுத்துக்கொண்டுவரப் பார்த்தார்கள். 6 அவர்கள் அங்கு இல்லாததால், யாசோனையும் சில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். 7 இவர்களை யாசோன் தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். இவர்கள் எல்லோரும் இயேசு என்னும் வேறு ஒருவனை ராஜா என்று சொல்லி, பேரரசனுடைய கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சத்தமிட்டு, 8 இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். 9 பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.
பவுல் கலாத்தியர்களுக்கு எழுதுகிறார் கி.பி. 51
சடங்காச்சார நியாயப்பிரமாணத்திற்கு அவர்கள் முழுமையின்றிக் கீழ்ப்படிந்தது அல்ல, கிறிஸ்துவின்மீதுள்ள விசுவாசமே அவர்களுடைய இரட்சிப்புக்குக் காரணம் என்பதை, யூதமுறைப்படி நடக்கச் செய்யும் போதகர்களுக்கு எதிராக நிரூபிக்கப் பவுல் கலாத்தியர்களுக்குத் தமது கடிதத்தை எழுதுகிறார்.
பவுல் கலாத்தியர்களை வாழ்த்துகிறார்
பவுல் தமது அப்போஸ்தல அதிகாரத்தை நியாயப்படுத்தி, சகோதரர்களை வாழ்த்துகிறார்.
1 மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும், 2 என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: 3 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக; 4 அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; 5 அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
அவருடைய நற்செய்தியைவிட்டு விலகியதற்காகக் கலாத்தியர்கள் கண்டிக்கப்படுகிறார்கள்
தமது நற்செய்தியைவிட்டு விலகியதற்காகப் பவுல் கலாத்தியர்களைக் கண்டிக்கிறார்.
6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; 7 வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள். 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். 9 முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். 10 இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
பவுலின் அப்போஸ்தல அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது
பொய்ப்போதகர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், பவுல் தமது அப்போஸ்தலப் பதவியைத் தேவனிடமிருந்து பெற்றதாக உறுதிப்படுத்தி, தமது மனமாற்றம், தமக்கு அளிக்கப்பட்ட பணி, தமது வாழ்க்கையின் பொதுவான போக்கு ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறார்.
11 மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 12 நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 13 நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; 14 என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். 15 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், 16 தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்; 17 எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். 18 மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன். 19 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை. 20 நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன். 21 பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன். 22 மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன். 23 முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு, 24 எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
2:1 பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன். 2 நான் தேவ அறிவிப்பினாலே அங்குபோய், யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்; ஆனாலும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகப் போகாதபடி சபையை நடத்துகிற தலைவர்களுக்கே தனிமையாக விளக்கிச் சொன்னேன். 3 ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை. 4 கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது. 5 நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. 6 அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே. 7 அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால், 8 விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து; 9 எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து, 10 ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன்.
யூதமுறைப்படி நடக்கச் செய்ததற்காகப் பவுல் பேதுருவைக் கண்டிக்கிறார்
யூதமுறைப்படி நடக்கச் செய்ததற்காகப் பவுல் பேதுருவைக் கண்டிக்கிறார். விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்ற போதனையை அவர் நிலைநிறுத்துகிறார். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட யூதர்களே சடங்காச்சார நியாயப்பிரமாணத்தால் இரட்சிப்பைக் கொண்டுவர முடியாது என்று உறுதியாக நம்பியிருந்தால், யூதரல்லாத மக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, அது அவர்களைக் கட்டுப்படுத்துவதோ சாத்தியமில்லை என்று அவர் வாதிடுகிறார்.
11 மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன். 12 எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். 13 மற்ற யூதர்களும் அவனோடுகூட இணைந்து மாய்மாலம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாய்மாலத்தினாலே பர்னபாவும் ஈர்க்கப்பட்டான். 14 இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்? 15 யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். 16 நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. 17 கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே. 18 நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன். 19 தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. 20 கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். 21 நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.