சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தமான பெரோயாவினர்

தெசலோனிக்கேயிலிருந்து பெரோயாவுக்கு. பெரோயாவினர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருப்பதற்கான காரணங்கள்.

கி.பி. 51

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10–14

10 அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்திற்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். 11 அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள். 12 அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கர்களில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள். 13 பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்தபோது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள். 14 உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள்.

அத்தேனேயில் தத்துவஞானிகளுக்குப் பவுல் பிரசங்கிக்கிறார்

சீலாவையும் தீமோத்தேயுவையும் பெரோயாவில் விட்டுவிட்டுப் பவுல் அத்தேனேக்குச் செல்கிறார்; அங்கே தத்துவஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் பிரசங்கிக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:15–34

15 பவுலைக் கூட்டிச்சென்றவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோனார்கள். அங்கே பவுல், சீலாவையும் தீமோத்தேயுவையும் சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான்.

16 அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைப் பார்த்து, தன் மனதில் அதிக வைராக்கியம் கொண்டு, 17 ஜெப ஆலயத்தில் யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தையில் பார்ப்பவர்களோடும் தினமும் பேசிக்கொண்டிருந்தான். 18 அப்பொழுது எப்பிக்கூரர்களும் ஸ்தோயிக்கர்களுமான ஞானிகளில் சிலர் அவனோடுகூட வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் போதித்ததினால் அப்படிச் சொன்னார்கள். 19 அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு கூட்டிக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற இந்த புதிய உபதேசம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா? 20 நீ சொன்ன அநேக வினோதமான காரியங்களை எங்களுடைய காதுகளில் கேட்டோம்; அதின் விளக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்றார்கள். 21 அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான காரியங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்களுடைய நேரத்தைச் செலவழித்தார்கள். 22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனே பட்டணத்தாரே, எல்லாக் காரியத்திலும் உங்களை அதிக பக்தியுள்ளவர்களாகப் பார்க்கிறேன். 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்களுடைய ஆராதனைகளை கவனித்துப் பார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைப் பார்த்தேன்; நீங்கள் அறியாமல் ஆராதனை செய்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. 25 எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை. 26 மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார். 28 ஏனென்றால், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்களுடைய புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். 29 நாம் தேவனுடைய வம்சமாக இருப்பதினால், மனிதனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக்கூடாது. 30 மக்களின் அறியாமையின் நாட்களை தேவன் பார்க்காதவர்போல இருந்தார்; இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார். 31 ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாக நியாயந்தீர்ப்பார்; அந்த மனிதனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். 32 மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள். 33 எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான். 34 சிலர் பவுலோடு சேர்ந்துகொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பெயருள்ள ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.

கொரிந்துவில் பவுல் தம் பிழைப்புக்காக வேலை செய்கிறார்

அத்தேனேயிலிருந்து பவுல் கொரிந்துவுக்குச் செல்கிறார்; அங்கே தம் பிழைப்புக்காக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். சீலாவும் தீமோத்தேயுவும் கொரிந்துவில் அவருடன் சேர்ந்துகொள்கிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:1–5

1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து; 2 யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான். 3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான். 4 ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான். 5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்தபோது, பவுல் வைராக்கியத்தோடு, இயேசுவே கிறிஸ்து என்று யூதர்களுக்கு நிரூபித்தான்.