தெசலோனிக்கேயருக்குப் பவுல் எழுதுகிறார்

அவிசுவாசமுள்ள யூதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான தெசலோனிக்கேயரை விசுவாசத்தில் நிலைநிறுத்துவதற்காகப் பவுல் தமது முதல் கடிதத்தை அவர்களுக்கு எழுதுகிறார்; கிறிஸ்தவத்திற்கான சான்றுகளை அவர்கள் மனதில் உறுதியாகப் பதியச் செய்கிறார்.

கி.பி. 51

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தெசலோனிக்கேயரைப் பவுல் வாழ்த்துகிறார்

முன்னுரையும் வாழ்த்தும்.

1 தெசலோனிக்கேயர் 1:1–4

1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

2 தேவனுக்குப் பிரியமான சகோதரர்களே, உங்களுடைய விசுவாசத்தின் செயல்களையும், உங்களுடைய அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்களுடைய நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, 3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, 4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

பவுலின் முதல் வாதம்: அற்புத வரங்கள்

கிறிஸ்தவத்தின் உண்மைக்கான தமது முதல் வாதத்தைப் பரிசுத்த ஆவியானவரின் அற்புத வரங்களிலிருந்து பவுல் எடுத்துரைக்கிறார். கிறிஸ்தவ விசுவாசத்தின்மீது அவர்கள் கொண்டுள்ள நிலையான பற்றுறுதியைக் குறித்து மகிழ்ந்து, அதைப் பாராட்டுகிறார்.

1 தெசலோனிக்கேயர் 1:5–10

5 எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 7 இவ்விதமாக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் மாதிரிகளானீர்கள். 8 எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது. 9 ஏனென்றால், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடம் எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு, நீங்கள் சிலை வழிபாடுகளைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவரும், இனிவரும் கோபத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறவருமாக இருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும் அறிவிக்கிறார்களே.

பிரசங்கிகளின் வாழ்க்கை சுவிசேஷத்தின் உண்மையை நிரூபிக்கிறது

சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவர்களின் குணம், நடத்தை, துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து அதன் உண்மையைப் பவுல் நிரூபிக்கிறார். தெசலோனிக்கேயர் அதை ஒரு தத்துவ அமைப்பாக அல்லாமல் தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டதற்காக அவர் தேவனுக்கு நன்றி செலுத்துகிறார்; அவர்களுடைய நடத்தையில் அது ஏற்படுத்திய தாக்கம் இதைக் காட்டியது.

1 தெசலோனிக்கேயர் 2:1–13

1 சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பிரயோஜனமில்லாததாக இருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள். 2 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிப்பட்டணத்திலே நாங்கள் பாடுகள்பட்டு நிந்தையடைந்திருந்தும், மிகுந்த போராட்டத்தோடு தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம். 3 எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை. 4 தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். 5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி. 6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. 7 பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்; 8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம். 9 சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். 10 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. 11 மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று, 12 தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள். 13 ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது.

யூதர்களின் துன்புறுத்தும் மனப்பான்மை

சுவிசேஷத்தின் வல்லமையையும் மனந்திரும்பியவர்களின் விசுவாசத்தையும் சோதனைக்குள்ளாக்கும் யூதர்களின் துன்புறுத்தும் மனப்பான்மையைப் பவுல் காட்டுகிறார். யூதரல்லாதவர்களுக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்கு அவர்கள் காட்டும் பகைமையையும், அவர்களுடைய தீமையையும் அழிவையும் எடுத்துக்காட்டுகிறார். தெசலோனிக்கேயர்மீது தமக்குள்ள அன்பையும் அவர்களைக் காணும் ஆவலையும் அறிவிக்கிறார்; தம்முடைய எதிரிகளின் இருதயங்களில் சாத்தான் செலுத்தும் செல்வாக்கு மட்டுமே இதைத் தடுத்துள்ளது.

1 தெசலோனிக்கேயர் 2:14–20

14 எப்படியென்றால், சகோதரர்களே, யூதேயா நாட்டில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதர்களாலே எப்படிப் பாடுகள்பட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்களுடைய சொந்த மக்களாலே பாடுகள்பட்டீர்கள். 15 அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்களுடைய தீர்க்கதரிசிகளையும், கொலை செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கு விருப்பமில்லாதவர்களும், மனிதர்கள் அனைவருக்கும் விரோதிகளுமாக இருந்து, 16 யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது.

17 சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம். 18 ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான். 19 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; 20 நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.

அவர்களைப் பலப்படுத்தப் பவுல் தீமோத்தேயுவை அனுப்புகிறார்

தெசலோனிக்கேயரைக் குறித்துத் தமக்குள்ள கவலையைப் பவுல் தெரிவிக்கிறார். அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும், முன்பே எச்சரிக்கப்பட்டபடி எல்லாக் கிறிஸ்தவர்களும் எதிர்கொள்ளும் பல துன்பங்களில் அவர்களை ஆறுதல்படுத்தவும் தாம் தீமோத்தேயுவை அனுப்பியதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.

1 தெசலோனிக்கேயர் 3:1–5

1 ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம். 2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். 3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. 4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள். 5 ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன்.

தீமோத்தேயுவின் செய்தி பவுலுக்கு ஆறுதல் அளிக்கிறது

அவர்களைக் குறித்துத் தீமோத்தேயு கொண்டுவந்த செய்தியால் தாம் ஆறுதலடைந்ததாகப் பவுல் தெரிவிக்கிறார். அவர்களை மீண்டும் காண இன்னொரு வாய்ப்புக்காக ஏங்குகிறார்; கிறிஸ்துவின் வருகைவரை அவர்கள் பரிசுத்தத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்.

1 தெசலோனிக்கேயர் 3:6–13

6 இப்பொழுது தீமோத்தேயு உங்களிடமிருந்து எங்களிடம் வந்து, உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும்குறித்து, நீங்கள் எப்பொழுதும் எங்களை அன்பாக நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறீர்கள் என்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, 7 சகோதரர்களே, எங்களுக்குச் சம்பவித்த எல்லா நெருக்கத்திலும், உபத்திரவத்திலும் உங்களுடைய விசுவாசத்தினாலே உங்களால் ஆறுதல் அடைந்தோம். 8 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம். 9 மேலும், நம்முடைய தேவனுக்குமுன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாக நன்றி செலுத்துவோம்? 10 உங்களுடைய முகத்தைக் கண்டு, உங்களுடைய விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்படிக்கு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. 11 நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. 12 நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, 13 இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.