பரிசுத்தத்திற்கும் தூய்மைக்கும் அழைப்பு

மனந்திரும்பிய யூதரல்லாதவர்கள் பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டுமென்று பவுல் காட்டுகிறார். அவர்கள் முன்பு ஈடுபட்டிருந்ததும், பிறசமயத்தார் இன்னும் கடைப்பிடிப்பதுமான தீய பழக்கங்களுக்கு எதிராக அவர்களை எச்சரிக்கிறார். சகோதர அன்பு காட்டவும் தங்கள் வேலையில் ஊக்கமாக இருக்கவும் அவர்களை வலியுறுத்துகிறார்.

கி.பி. 51

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 தெசலோனிக்கேயர் 4:1–12

1 அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். 2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே. 3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து, 4 தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல், 5 உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 6 இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார். 7 தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 8 ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான். 9 சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே. 10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்; 11 அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, 12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

மரித்தவர்கள் எவ்வாறு உயிர்த்தெழுவார்கள் எனப் பவுல் விவரிக்கிறார்

வருங்கால மகிழ்ச்சியைக் குறித்த அவர்களுடைய நம்பிக்கையைப் பறித்துவிடக்கூடிய தீவிரமுள்ள யூதர்களுக்கு எதிராகப் பவுல் அவர்களை எச்சரிக்கிறார். மரித்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழ மாட்டார்கள் என்று நம்பிய பிறசமயத்தாரைப்போல, தங்கள் மரித்தவர்களைக் குறித்து அளவுக்கு மீறிய துக்கத்திற்கு இடங்கொடுக்க வேண்டாமென்று அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. உயிர்த்தெழுதல் என்னும் மாபெரும் உண்மைக்கு மேலும் சான்றாக, கிறிஸ்துவே தமக்குக் கற்பித்தபடி அது எவ்வாறு நிகழும் என்பதைப் பவுல் விவரிக்கிறார்.

1 தெசலோனிக்கேயர் 4:13–18

13 அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை. 14 இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார். 15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 16 ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். 18 ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

கிறிஸ்துவின் திடீர் வருகைக்கு ஆயத்தமாக இருங்கள்

கிறிஸ்துவின் திடீரென்றும் பயங்கரமாகவும் நிகழும் தோற்றத்தையும், துன்மார்க்கரும் அவருடைய வருகையின் நாளுக்கு ஆயத்தமில்லாதவர்களும் நிச்சயமாக அழிவடைவதையும் சுட்டிக்காட்டிப் பரிசுத்தத்தின் அவசியத்தைப் பவுல் விளக்குகிறார். சுவிசேஷத்தின் விசுவாசத்திலும் நடைமுறையிலும் உறுதியாக நிலைத்திருப்பவர்களுக்கு, அந்த நாள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பின் நாளாக இருக்கும் என்ற உறுதி ஆறுதல் அளிக்கிறது.

1 தெசலோனிக்கேயர் 5:1–11

1 சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. 2 இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள். 3 சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. 4 சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே. 5 நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல. 6 ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம். 7 தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள். 8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம். 9 தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். 10 நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே. 11 ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள்.

தெசலோனிக்கேயருக்குப் பவுலின் இறுதி வேண்டுகோள்கள்

தங்கள் ஆவிக்குரிய போதகர்களுக்கு உரிய மதிப்பைக் காட்டும்படி பவுல் அவர்களை வலியுறுத்துகிறார்; மேலும் பல்வேறு ஊக்கமான வேண்டுகோள்களையும் விடுக்கிறார். ஜெபங்களுடனும் வாழ்த்துகளுடனும் முடிக்கிறார்.

1 தெசலோனிக்கேயர் 5:12–28

12 அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, 13 அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள். 14 மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள். 15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள். 16 எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள். 17 இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள். 18 எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. 19 ஆவியை அவித்துப்போடாமலிருங்கள். 20 தீர்க்கதரிசனங்களை சாதாரணமாக எண்ணாதிருங்கள். 21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 22 தீமையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டு விலகுங்கள். 23 சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 25 சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 26 சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். 27 இந்தக் கடிதம் பரிசுத்தமான சகோதரர்கள் எல்லோருக்கும் வாசிக்கப்படவேண்டுமென்று கர்த்தரின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். 28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

கொரிந்துவில் தங்கி யூதரல்லாதவர்களுக்குப் பவுல் பிரசங்கிக்கிறார்

யூதர்களால் நிராகரிக்கப்பட்ட பவுல், கொரிந்துவில் தொடர்ந்து தங்கி யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6–11

6 அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி, 7 அந்த இடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்பவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்து இருந்தது. 8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் குடும்பமாக கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேக மக்கள் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். 9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாக இருக்காதே; 10 நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார். 11 அவன் ஒரு வருடம் ஆறுமாத காலங்கள் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.