உவமைகளின் முதல் பெரிய தொகுப்பு

இங்கு உவமைகளின் முதல் பெரிய தொகுப்பையும், கெராசாவுக்குச் சென்றதையும் நாசரேத்துக்குத் திரும்பியதையும் காண்கிறோம்.

அதே நாள். கலிலேயா கடலோரம்

கி.பி. 27 முதல் 29 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 13:1–53

தொகுப்பின் அறிமுகம்

13:1 இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.

2 திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.

3 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.

விதைக்கிறவனின் உவமை

கடலோரத்திலுள்ள மக்கள்கூட்டத்திற்கு: விதைக்கிறவனின் உவமை.

4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.

5 சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.

6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின.

7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.

8 சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன.

9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.

10 அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.

11 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.

12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13 அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன்.

14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது:

காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்;

கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

15 இந்த மக்கள் கண்களினால் காணாமலும்,

காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும்,

நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக,

அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது;

காதால் மந்தமாகக் கேட்டு,

தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.

16 உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். 17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 18 ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். 19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

20 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்;

21 ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.

களைகளின் உவமை

24 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது. 25 மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். 26 பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. 27 வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். 28 அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். 29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். 30 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

கடுகு விதையின் உவமை

31 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். 32 அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.

புளித்தமாவின் உவமையும் அதுபோன்ற பல உவமைகளும்

33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.

34 இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.

35 என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

இயேசு களைகளின் உவமையை விளக்குகிறார்

வீட்டிலுள்ள சீடர்களுக்கு: களைகளின் உவமைக்கான விளக்கம்.

36 அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள். 37 அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்; 38 நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்; 39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். 40 ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். 41 மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, 42 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். 43 அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.

மறைந்திருக்கும் புதையலின் உவமை

44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.

விலையுயர்ந்த முத்தின் உவமை

45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. 46 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.

வலையின் உவமை

47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது. 48 அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள். 49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, 50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

வீட்டெஜமானின் உவமை

51 பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள். 52 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார்.

53 இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு,

மாற்கு 4:1–34

தொகுப்பின் அறிமுகம்

4:1 இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள்.

2 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்:

விதைக்கிறவனின் உவமை

கடலோரத்திலுள்ள மக்கள்கூட்டத்திற்கு: விதைக்கிறவனின் உவமை.

3 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான்.

4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது.

5 சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது;

6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது.

7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது.

8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது.

9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.

10 அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள்.

11 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

12 “அவர்கள் குணமாகாதபடிக்கும்,

பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும்,

அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,

கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி,

இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.

13 பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? 14 விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.

15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள். 16 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும்,

17 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.

18 வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். 19 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.

20 வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார்.

21 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?

22 வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை.

23 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார். 24 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். 25 உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

தானாக வளரும் விதையின் உவமை

26 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து; 27 இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது. 28 எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும். 29 பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

கடுகு விதையின் உவமை

30 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்? 31 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது; 32 விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்.

புளித்தமாவின் உவமையும் அதுபோன்ற பல உவமைகளும்

33 அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.

34 உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார்.

லூக்கா 8:4–18

தொகுப்பின் அறிமுகம்

8:4 எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது:

விதைக்கிறவனின் உவமை

கடலோரத்திலுள்ள மக்கள்கூட்டத்திற்கு: விதைக்கிறவனின் உவமை.

5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன.

6 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது.

7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.

8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார்.

9 அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ,

அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,

கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக,

அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

11 “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.

12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள்.

15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.

17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.

18 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.