ஏரியைக் கடக்கும்போது இயேசு புயலை அடக்குகிறார்
அதே நாள். கலிலேயா கடல்
கி.பி. 27 முதல் 29 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 8:18, 23–27
8:18 பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.
23 அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள்.
24 அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
25 அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள்.
26 அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது.
27 அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
மாற்கு 4:35–41
4:35 அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார்.
36 அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது.
37 அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது.
38 இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள்.
39 அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது.
40 அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார்.
41 அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
லூக்கா 8:22–25
8:22 பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
23 படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.
24 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது.
25 அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
பிசாசு பிடித்த கெரசேனனை இயேசு குணமாக்குகிறார்
ஏரியின் அக்கரையில், இயேசு கதரேனருடைய நாட்டில் பிசாசு பிடித்திருந்த மனிதனைக் குணமாக்குகிறார்.
கெராசா (குர்சி). அதே நாள்
மத்தேயு 8:28–34
8:28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது.
29 அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள்.
30 அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
32 அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின.
33 அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள்.
34 அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
மாற்கு 5:1–20
5:1 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள்.
2 அவர் படகில் இருந்து இறங்கினவுடனே, அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான். 3 அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான்; அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை. 4 அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை. 5 அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6 அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:
7 இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
8 ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார்.
9 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி,
10 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
11 அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
12 அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து: பன்றிகளுக்குள்ளே போக, அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
13 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது.
14 பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு;
15 இயேசுவிடம் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து, உடை அணிந்து, உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பயந்தார்கள்.
16 பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள்.
17 அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 18 அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான். 19 இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல்: நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு மனமிறங்கி, உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார். 20 அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
லூக்கா 8:26–39
8:26 பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.
28 அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான்.
29 அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30 இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.
31 தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
32 அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
33 அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன. 34 அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35 அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36 பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார். 38 பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். 39 இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான்.