யவீருவின் மகளும் கிறிஸ்துவின் ஆடையைத் தொடும் பெண்ணும்
திரும்பி வரும்போது, யவீருவின் மகளையும் கிறிஸ்துவின் ஆடையை மட்டும் தொட்ட பெண்ணையும் இயேசு குணமாக்குகிறார்.
அநேகமாக கப்பர்நகூம்
கி.பி. 27 முதல் 29 வரை
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 9:18–26
9:18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
19 இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
20 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
21 நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
23 இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
24 விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். 25 மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
26 இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
மாற்கு 5:21–43
5:21 இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்தில் இருந்தபோது, அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள்.
22 அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: 23 என் மகள் மரணவேதனைப்படுகிறாள், அவள் சுகமடைய, நீர் வந்து, அவள்மேல் உமது கரங்களை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான்.
24 அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள்.
25 அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண், 26 அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது,
27 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு: நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி; 28 மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து, அவருடைய ஆடையைத் தொட்டாள். 29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது; அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். 30 உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து, மக்கள்கூட்டத்தில் திரும்பி: என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார்.
31 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். 32 இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
33 தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள்.
34 அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடு போய், உன் வேதனை நீங்கி, சுகமாக இரு என்றார்.
35 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள். 36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி;
37 வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்;
38 ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு,
39 உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார்.
40 அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று,
41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம்.
42 உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 43 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.
லூக்கா 8:40–56
8:40 இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
41 அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால்,
42 தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள்.
43 அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண்,
44 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.
45 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். 47 அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
49 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.
50 இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51 அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல்,
52 எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார். 53 அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54 எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55 அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார். 56 அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
பார்வையற்ற இருவரையும் பேச இயலாத ஒருவனையும் இயேசு குணமாக்குகிறார்
பார்வையற்ற இருவரையும் பிசாசு பிடித்துப் பேச இயலாத ஒருவனையும் இயேசு குணமாக்குகிறார்; தேவநிந்தனையான ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
மத்தேயு 9:27–34
9:27 இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 28 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள். 29 அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். 30 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 31 அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள். 32 அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள். 33 பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள். 34 பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
இயேசு கடைசிமுறையாக நாசரேத்துக்குச் செல்கிறார்
மத்தேயு 13:54–58
13:54 தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55 இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா? 56 இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
57 அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.
58 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.
மாற்கு 6:1–6
6:1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள். 2 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார். 5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
6 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.