இயேசு பெயெல்செபூலுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்

இயேசு பெயெல்செபூலுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் என்ற தேவதூஷணமான குற்றச்சாட்டு.

அடுத்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் பரபரப்பான நாள் என்று அழைக்கப்படும் ஒரே நாளில் நடந்தன என்பதைக் கவனியுங்கள்.

கலிலேயா

கி.பி. 27 முதல் 29 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 12:22–37

12:22 அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார். 23 மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.

24 பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.

25 இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. 26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? 27 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.

28 நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. 29 அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.

30 என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

32 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். 34 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். 35 நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 36 மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 37 ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.

மாற்கு 3:20–30

3:20 பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது. 21 அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். 22 எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள்: இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

23 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? 24 ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே.

25 ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே. 26 சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால், அவன் நிலைத்து நிற்கமுடியாமல், அழிந்துபோவானே.

27 பலசாலியை முதலில் கட்டிப்போடாமல், யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து, அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது; கட்டிப்போட்டால்மட்டுமே, அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும்.

28 உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; 29 ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால், அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார்.

30 இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார்.

வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அடையாளம் காட்டுமாறு வற்புறுத்துகிறார்கள்

அதே நாள். கலிலேயா

மத்தேயு 12:38–45

12:38 அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள். 39 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40 யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42 தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 43 அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44 நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து, 45 திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார்.

கிறிஸ்துவின் தாயும் சகோதரர்களும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயல்கிறார்கள்

அதே நாள். கலிலேயா

மத்தேயு 12:46–50

12:46 இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.

47 அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.

48 தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி,

49 தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!

50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.

மாற்கு 3:31–35

3:31 அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.

32 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.

33 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி;

34 தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!

35 தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.

லூக்கா 8:19–21

8:19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது.

20 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.

21 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.