பகுதி 8: யோவாஸின் ஆட்சி

யூதாவின் ராஜ்யம்

யோவாஸின் ஆரம்பகால ஆட்சி

கி.மு. 878

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 11:21–12:3

21 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

12:1 யெகூவின் ஏழாம் வருட ஆட்சியில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; பெயெர்செபா ஊரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் சிபியாள். 2 ஆசாரியனாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரைசெய்த நாட்களெல்லாம் அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 3 மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.

2 நாளாகமம் 23:16–21

16 அப்பொழுது யோய்தா தாங்கள் யெகோவாவுடைய மக்களாயிருக்க, தானும் அனைத்து மக்களும் ராஜாவும் உடன்படிக்கை செய்துகொள்ளும்படி செய்தான். 17 அப்பொழுது மக்களெல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். 18 தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும், பாடல்களோடும் யெகோவாவின் சர்வாங்க தகனபலிகளை, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் பதவிகளை தாவீது யெகோவாவுடைய ஆலயத்துக்கென்று ஏற்படுத்திவைத்த லேவியரான ஆசாரியர்களின் கைகளில் ஒப்படைத்து, 19 யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையாமலிருக்க, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான். 20 நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், மக்களை ஆளுகிறவர்களையும், தேசத்தின் அனைத்து மக்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, உயர்ந்த வாசல்வழியாக ராஜ அரண்மனைக்குள் அழைத்து வந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரச்செய்தார்கள். 21 தேசத்து மக்களெல்லோரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமைதலானது.

2 நாளாகமம் 24:3

3 அவனுக்கு யோய்தா இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான்; அவர்களால் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

தேவாலயம் பழுதுபார்க்கப்படுகிறது கி.மு. 856

2 நாளாகமம் 24:4–5

4 அதற்குப்பின்பு யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பம்கொண்டான். 5 அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருடந்தோரும் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர்கள் தாமதம்செய்தார்கள்.

2 இராஜாக்கள் 12:4–6

4 யோவாஸ் ஆசாரியர்களை நோக்கி: யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுகிற பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களாகிய எல்லாப் பணத்தையும், மக்களின் வரிப்பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரும்படி அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும், 5 ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது இருக்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான். 6 ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருடம்வரை ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபார்க்காததால்,

2 நாளாகமம் 24:6

6 அப்பொழுது ராஜா, யோய்தா என்னும் தலைவனை வரவழைத்து: சாட்சியின் கூடாரத்திற்குக் கொடுக்க, யெகோவாவின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியர்களை நீர் விசாரிக்காமல் போனதென்ன?

2 இராஜாக்கள் 12:7–14

7 ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான். 8 அப்பொழுது ஆசாரியர்கள் மக்களின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபார்க்காமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள். 9 ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தின் அருகில் யெகோவாவுடைய ஆலயத்தில் மக்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள். 10 பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனும் வந்து: யெகோவாவுடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி பைகளிலேபோட்டுக் கட்டி, 11 எண்ணின பணத்தைக் யெகோவாவுடைய ஆலயத்திலே கண்காணிப்பாளர்களின் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பிகளுக்கும், 12 கொல்லருக்கும், கல்தச்சருக்கும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குத் தேவையான எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள். 13 யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், வாத்தியக்கருவிகளும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படாமல், 14 யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.

2 நாளாகமம் 24:12–14

12 அதை ராஜாவும் யோய்தாவும் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையைச் செய்யும் ஊழியக்காரர்கள் கையிலே கொடுத்தார்கள்; அதனால் அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி சிற்பிகளையும், தச்சரையும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொல்லர்களையும் கம்மாளர்களையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள். 13 அப்படி வேலையை செய்கிறவர்கள் தங்கள் கைகளினாலே வேலையைச் செய்து, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின நிலைமைக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள். 14 அதை முடித்தபின்பு, மீதமிருந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு யெகோவாவுடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் செய்தான்; யோய்தாவின் நாட்களெல்லாம் அனுதினமும் யெகோவாவுடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.

2 இராஜாக்கள் 12:15–16

15 வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படி, பணத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களின் கையிலே கணக்குக் கேட்காமலிருந்தார்கள்; அவர்கள் அதை உண்மையாகச் செய்தார்கள். 16 குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் யெகோவாவுடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியர்களைச் சேர்ந்தது.