யோவாஸ் வழிவிலகி மரணமடைகிறார்

கி.மு. 840

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 12:17–18

17 அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் போர்செய்து அதைப் பிடித்தான்; அதன் பின்பு எருசலேமுக்கு விரோதமாகப்போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான். 18 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் முன்னோர்களாகிய யோசபாத், யோராம், அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்செய்துவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் செய்துவைத்ததையும், யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலுமுள்ள பொக்கிஷங்களில் கிடைத்த பொன் எல்லாவற்றையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமைவிட்டுத் திரும்பிப்போனான்.

2 நாளாகமம் 24:15–26

15 யோய்தா நீண்டஆயுள் உள்ளவனாக முதிர்வயதில் இறந்தான்; அவன் இறக்கும்போது நூற்றுமுப்பது வயதாயிருந்தான். 16 அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்ததால், அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.

17 யோய்தா இறந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்கள் சொல்வதைக் கவனித்தான் 18 அப்படியே அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது. 19 அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பச்செய்ய யெகோவா அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் மக்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் மக்கள் அவர்களை அசட்டைசெய்தார்கள். 20 அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் மகனான சகரியாவின்மேல் இறங்கினதால், அவன் மக்களுக்கு எதிரே நின்று: நீங்கள் யெகோவாவுடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதனால் நீங்கள் செழிப்படையமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். 21 அதனால் அவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, யெகோவாவுடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கட்டளையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 22 அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா, தனக்கு செய்த தயவை ராஜாவாகிய யோவாஸ் நினைக்காமல் அவனுடைய மகனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: யெகோவா அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான். 23 அடுத்த வருடத்திலே சீரியாவின் படைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, மக்களின் பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள். 24 சீரியாவின் படை சிறுகூட்டமாக வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், யெகோவா மகா பெரிய படையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள். 25 அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர்கள் ஆசாரியனாகிய யோய்தாவுடைய மகன்களின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுசெய்து, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. 26 அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்தவர்கள், அம்மோனிய பெண்ணான சிமியாத்தின் மகனாகிய சாபாத்தும், மோவாபியப் பெண்ணான சிமிரீத்தின் மகனாகிய யோசபாத்துமே.

2 இராஜாக்கள் 12:20–21

20 யோவாசின் ஊழியக்காரர்கள் எழும்பி சதிசெய்து, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள். 21 சிமியாதின் மகனாகிய யோசகார், சோமேரின் மகனாகிய யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர்கள் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 24:27

27 அவன் மகன்களைக்குறித்தும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைக்குறித்தும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைக்குறித்தும், ராஜாக்களின் புத்தகமான சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்திலே ராஜாவானான்.

2 இராஜாக்கள் 12:19

19 யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 நாளாகமம் 24:1–2

1 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள். 2 ஆசாரியனாகிய யோய்தாவின் நாட்களெல்லாம் யோவாஸ் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 11:17–20

17 அப்பொழுது யோய்தா, அவர்கள் யெகோவாவுடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து, 18 பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான். 19 நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவர்களையும், காவலாளர்களையும் தேசத்தின் மக்களையும் கூட்டி, ராஜாவைக் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து இறங்கச்செய்து, அவனைக் காவலாளர்களின் வாசல் வழியாக ராஜஅரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான். 20 தேசத்தின் மக்கள் எல்லோரும் மகிழ்ந்து, நகரம் அமைதலானது. அத்தாலியாளையோ ராஜாவின் அரண்மனை அருகில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.