பகுதி 7: அத்தாலியாளின் ஆட்சி

யூதாவின் ராஜ்யம்

கி.மு. 884

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 நாளாகமம் 22:10–12

10 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சத்தார் அனைவரையும் கொன்றுபோட்டாள். 11 ராஜாவின் மகளாகிய யோசேபியாத், கொன்று போடப்படுகிற ராஜகுமாரர்களுக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசை ஒருவருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு, அவனையும் அவன் வேலைக்காரியையும் படுக்கையறையில் வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாமலிருக்க, ராஜாவாகிய யோராமின் மகளும் ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாக இருந்தாள். 12 இவர்களோடு அவன் ஆறுவருடங்களாகக் யெகோவாவுடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ஆட்சிசெய்தாள்.

2 நாளாகமம் 24:7–11

7 அந்தப் பொல்லாத பெண்ணாகிய அத்தாலியாளுடைய மக்கள், தேவனுடைய ஆலயத்தை வலுக்கட்டாயமாகத் திறந்து, யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காக செலவு செய்துவிட்டார்களே என்றான். 8 அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் யெகோவாவுடைய ஆலய வாசலுக்கு வெளியே வைத்து, 9 யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள். 10 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் சந்தோஷமாகக் கொண்டுவந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள். 11 அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

2 நாளாகமம் 23:1–15

1 ஏழாம் வருடத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் மகன் அசரியாவையும், யோகனானின் மகன் இஸ்மவேலையும், ஓபேதின் மகன் அசரியாவையும், அதாயாவின் மகன் மாசெயாவையும், சிக்ரியின் மகன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான். 2 அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியர்களையும், இஸ்ரவேலுடைய முன்னோர்களின் வம்சத்தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள். 3 அந்த சபையார் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடு உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, யெகோவா தாவீதின் மகன்களைக்குறித்து சொன்னபடியே ராஜாவின் மகன் ராஜாவாக வேண்டும். 4 நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இந்தவாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியர்களும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒரு பங்கு நுழைவாயில்களையும், 5 மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையையும், மூன்றில் ஒரு பங்கு அஸ்திபாரவாசலையும் காக்கவும், மக்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும். 6 ஆசாரியர்களும் லேவியர்களில் ஊழியம் செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; மக்களெல்லோரும் யெகோவாவுடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களாக. 7 லேவியர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்திற்குள் வருகிற எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடு இருங்கள் என்றான். 8 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்து, அவரவர் அந்த வாரத்தின் முறைப்படி வருகிறவர்களும், முறை முடிந்து போகிறவர்களுமான தம்தம் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; குழுக்கள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா அனுமதி கொடுக்கவில்லை. 9 தாவீது ராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் சிறிய மற்றும் பெரிய கேடகங்களையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து, 10 அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக ஆலயத்தின் வலதுபக்கம்துவங்கி, ஆலயத்தின் இடதுபக்கம்வரை, பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க மக்களையெல்லாம் நிறுத்தினான். 11 பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் மகன்களும் அவனை அபிஷேகம்செய்து, ராஜா வாழ்க என்றார்கள். 12 மக்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து, 13 இதோ, நுழைவாயிலில் உள்ள தன்னுடைய தூண் அருகில் ராஜா நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்களெல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகர்களும் இசைத்தலைவர்களும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள். 14 ஆசாரியனாகிய யோய்தா படைத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். யெகோவாவின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடவேண்டாம் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். 15 அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரண்மனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடம்வரை போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.

2 இராஜாக்கள் 11:1–16

1 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் மகன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார்கள் அனைவரையும் கொலைசெய்தாள். 2 ராஜாவாகிய யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலைசெய்யப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் வளர்ப்புத் தாயையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் படுக்கையறையில் ஒளித்துவைத்தார்கள். 3 இவளோடேகூட அவன் ஆறுவருடங்கள் யெகோவாவுடைய ஆலயத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் அரசாட்சிசெய்தாள். 4 ஏழாம் வருடத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவர்களையும் காவலாளர்களையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் யெகோவாவுடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைசெய்து, அவர்களைக் யெகோவாவுடைய ஆலயத்திலே உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்கு ராஜாவின் மகனைக் காண்பித்து, 5 அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரண்மனையைக் காவல் காக்கவேண்டும். 6 மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளர்களின் காவலின் பின்னே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாகக் காக்கவேண்டும். 7 இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் யெகோவாவுடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும். 8 நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நிற்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படவேண்டும்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான். 9 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் போகிறவர்களுமாகிய தங்கள் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள். 10 ஆசாரியன் யெகோவாவின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான். 11 காவலாளர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாக, ஆலயத்தின் வலப்பக்கம் தொடங்கி அதன் இடப்பக்கம்வரை, பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள். 12 அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் செய்து: ராஜா வாழ்க என்று சொல்லி கரங்களைத் தட்டினார்கள். 13 ஓடிவருகிற மக்களின் ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள மக்களிடம் வந்து, 14 இதோ, முறைமையின்படியே ராஜா தூண் அருகில் நிற்கிறதையும், ராஜாவின் அருகில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று சத்தமிட்டாள். 15 ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். யெகோவாவுடைய ஆலயத்தில் அவளைக் கொல்லக்கூடாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். 16 அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரண்மனைக்குள் குதிரைகள் நுழைகிற வழியிலே அவள் போகும்போது, அவளைக் கொன்றுபோட்டார்கள்.

இஸ்ரவேலின் ராஜ்யம்

2 இராஜாக்கள் 10:29

29 ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டுவிலகவில்லை.