சீடர்களால் குணமாக்க முடியாத பிசாசு பிடித்த சிறுவன்

பிலிப்பு செசரியா பகுதியில்

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 17:14–21

17:14 அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:

15 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான்.

16 அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான்.

17 இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

18 இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.

19 அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.

20 அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21 இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

மாற்கு 9:14–29

9:14 பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார்.

15 மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள்.

16 அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.

17 அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.

18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான்.

19 அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.

20 அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21 இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது; 22 இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23 இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார். 24 உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான். 25 அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

26 அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான். 27 இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.

28 அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள்.

29 அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார்.

லூக்கா 9:37–43

9:37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.

38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.

39 சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது. 40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான்.

41 இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

42 அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

43 அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி:

இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மீண்டும் முன்னறிவிக்கிறார்

பிறர் அறியாமல் கலிலேயா வழியாகத் திரும்பிச் செல்லும்போது, இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மீண்டும் முன்னறிவிக்கிறார்.

மத்தேயு 17:22–23

17:22 அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். 23 அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

மாற்கு 9:30–32

9:30 பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.

31 ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.

32 அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.

லூக்கா 9:44–45

9:44 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.

45 அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.