ஒரு மலையில் இயேசு மறுரூபமாகிறார்

பிலிப்பு செசரியாவுக்கு அருகிலுள்ள ஒரு மலையில் (அநேகமாக எர்மோன்) இயேசு மறுரூபமாகிறார்.

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 17:1–8

17:1 ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய்,

2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.

3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

4 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விருப்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

5 அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

6 சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.

7 அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.

8 அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.

மாற்கு 9:2–8

9:2 ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்.

3 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது.

4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

5 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான். 7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை.

லூக்கா 9:28–36

9:28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.

29 அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.

30 அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள், 31 அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். 32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.

33 அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான்.

34 இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.

35 அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

36 அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.

மூன்று சீடர்கள் எலியாவைப் பற்றிக் குழப்பமடைகிறார்கள்

மலையிலிருந்து இறங்கி வரும் வழியில், மூன்று சீடர்களும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் எலியாவைப் பற்றியும் குழப்பமடைகிறார்கள்.

மத்தேயு 17:9–13

17:9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

10 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்டார்கள்.

11 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான்.

12 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்களுடைய விருப்பப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனிதகுமாரனும் அவர்களால் பாடுகள்படுவார் என்றார்.

13 அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.

மாற்கு 9:9–13

9:9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

10 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:

11 எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள்.

12 அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.

13 ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.