இயேசு பன்னிருவரின் விசுவாசத்தைச் சோதிக்கிறார்
பிலிப்பு செசரியாவுக்கு அருகில், தாமே மேசியா என்பதில் பன்னிருவருக்கும் உள்ள விசுவாசத்தை இயேசு சோதிக்கிறார்.
கி.பி. 29 அல்லது 28
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 16:13–20
16:13 பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16 சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
மாற்கு 8:27–30
8:27 பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
28 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
29 அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான்.
30 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
லூக்கா 9:18–21
9:18 பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
19 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
20 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21 அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.
இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவிக்கிறார்
மேசியாவாகிய தாம் புறக்கணிக்கப்பட்டுக் கொல்லப்படுவார் என்றும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்றும் இயேசு தெளிவாக முன்னறிவிக்கிறார்.
மத்தேயு 16:21–26
16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். 23 அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
25 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
26 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
மாற்கு 8:31–37
8:31 அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
32 இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான். 33 அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார். 34 பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும்.
35 தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான்.
36 மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 37 மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்?
லூக்கா 9:22–25
9:22 மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
23 பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
25 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?
அந்தத் தலைமுறையில் மனிதகுமாரனின் வருகை
மத்தேயு 16:27–28
16:27 மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். 28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மாற்கு 8:38–9:1
8:38 எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
9:1 இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 9:26–27
9:26 என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். 27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.