மக்தலாவில் பரிசேயர்களும் சதுசேயர்களும் இயேசுவைத் தாக்குகிறார்கள்

கலிலேயாவிலுள்ள மக்தலாவுக்கு (தல்மனூத்தா) செய்த சிறிது நேர வருகையும், பரிசேயர்களும் சதுசேயர்களும் செய்த கடுமையான தாக்குதலும் (அவர்கள் இப்போது இயேசுவுக்கு எதிராகத் தோன்றுவதைக் கவனியுங்கள்).

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 15:39–16:4

15:39 அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.

16:1 பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள். 3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.

மாற்கு 8:10–12

8:10 உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.

11 அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

பெத்சாயிதாவில் இயேசு பார்வையற்ற ஒருவனைக் குணமாக்குகிறார்

நான்காவது முறையாக விலகிச் செல்லுதல்: ஏரோது பிலிப்புவின் கால்பங்கு ஆட்சிப்பகுதியிலுள்ள பெத்சாயிதா ஜூலியாசுக்குச் செல்லுதல். அக்கரைக்குச் செல்லும் வழியில், சீடர்களின் மந்தபுத்திக்காக இயேசு அவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார்; பெத்சாயிதாவில் பார்வையற்ற ஒருவனைக் குணமாக்குகிறார்.

மத்தேயு 16:5–12

16:5 அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.

6 இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.

7 நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

8 இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? 9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;

10 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?

11 பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

12 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

மாற்கு 8:13–26

8:13 அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார்.

14 சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது.

15 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார்.

16 அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

17 இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா?

18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா?

19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.

20 நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21 அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.

22 பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார். 24 அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான். 25 பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான். 26 பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.