இயேசு ஒரு சீரோபேனிக்கியா பெண்ணின் மகளைக் குணமாக்குகிறார்

இரண்டாவது முறையாக விலகிச் செல்லுதல்: தீரு, சீதோன் பகுதிக்குச் செல்லுதலும், ஒரு சீரோபேனிக்கியா பெண்ணின் மகள் குணமாக்கப்படுதலும்.

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 15:21–28

15:21 பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

23 அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார். 25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.

26 அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

27 அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.

28 இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.

மாற்கு 7:24–30

7:24 பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது. 25 அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.

26 அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்.

27 இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார்.

28 அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

29 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார். 30 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.

இயேசு நாலாயிரம் பேருக்கு உணவளிக்கிறார்

மூன்றாவது முறையாக விலகிச் செல்லுதல்: வடக்கே பெனிக்கே வழியாகவும், கிழக்கே எர்மோனை நோக்கியும், தெற்கே தெக்கப்போலிக்குள்ளும் செல்லுதல் (ஏரோது அந்திப்பாவின் ஆட்சிப்பகுதிக்குள் செல்லாமல்), அத்துடன் காது கேளாத, பேச முடியாத மனிதனைக் குணமாக்குதலும் நாலாயிரம் பேருக்கு உணவளித்தலும்.

மத்தேயு 15:29–38

15:29 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.

30 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார். 31 ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 32 பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.

33 அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.

34 அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.

35 அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36 அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.

37 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.

38 பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.

மாற்கு 7:31–8:9

7:31 மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார். 32 அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். 33 அப்பொழுது, அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாக்கைத் தொட்டு; 34 வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம். 35 உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான்.

36 அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி, 37 எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; காதுகேட்காதவர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

8:1 அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: 2 மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். 3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

4 அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள்.

5 அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள்.

6 அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். 7 சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார்.

8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள்.

9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.