கழுவாத கைகளைக் குறித்துப் பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்கிறார்கள்
கைகளின் சடங்குமுறைத் தீட்டைப் பற்றிய தங்கள் பாரம்பரியங்களைச் சீடர்கள் புறக்கணிக்க அனுமதிப்பதற்காக, எருசலேமிலிருந்து வந்த பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்கிறார்கள். இயேசு புரிந்துகொள்ளக் கடினமான ஓர் உவமையால் பதிலளிக்கிறார்.
அநேகமாகக் கப்பர்நகூமில்
கி.பி. 29 அல்லது 28
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மத்தேயு 15:1–3, 7–9, 4–6, 10–20
15:1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
2 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள். 3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
7 மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
8 இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து,
தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்;
அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
9 மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து,
வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
5 நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
6 உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
10 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
11 வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
12 அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். 13 அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும். 14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். 15 அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
16 அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா? 17 வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
19 எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
20 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
மாற்கு 7:1–23
7:1 எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள். 2 அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள். 3 ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்;
4 கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள்.
5 அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
6 அவர்களுக்கு அவர் மறுமொழியாக:
இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்;
அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும்,
7 மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து,
வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
8 நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார். 9 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது.
10 எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
11 நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி,
12 அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்;
13 நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
14 பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
15 மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். 16 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
17 அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
18 அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
19 அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது; அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும்.
20 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும். 21 எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22 திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23 பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
யோவான் 7:1
7:1 இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.