இயேசு அரைச் சேக்கல் ஆலய வரியைச் செலுத்துகிறார்

மேசியாவாகிய இயேசு ஆலயத்திற்காக அரைச் சேக்கலைச் செலுத்துகிறார்.

கலிலேயாவிலிருந்து விலகியிருந்த காலம் இப்போது முடிந்துவிட்டது. இக்காலத்தின் மீதமுள்ள நிகழ்வுகள் அநேகமாகச் சில நாட்களில் மட்டுமே நடந்திருக்கலாம்.

கப்பர்நகூம்

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 17:24–27

17:24 அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். 25 அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். 26 அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே. 27 ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.

யார் பெரியவர் என்று பன்னிருவரும் வாதிடுகிறார்கள்

மேசியாவின் ஆட்சியில் யார் பெரியவராக இருப்பார் என்று பன்னிருவரும் வாதிடுகிறார்கள். அவருடைய குடிமக்கள் சிறுபிள்ளைகளைப் போல் இருக்க வேண்டும்.

கப்பர்நகூம்

மத்தேயு 18:1–5

18:1 அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.

2 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4 ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்.

5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.

மாற்கு 9:33–37

9:33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார். 34 அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள்.

35 அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி;

36 ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:

37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

லூக்கா 9:46–48

9:46 பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது.

47 இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி,

48 அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார்.

யோவானின் தவறான வைராக்கியத்தை இயேசு கண்டிக்கிறார்

அப்போஸ்தலனாகிய யோவானின் தவறான வைராக்கியத்தை இயேசு பொருத்தமான உவமைகளால் கண்டிக்கிறார்.

கப்பர்நகூம்

மத்தேயு 18:6–14

18:6 என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும். 7 இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும்.

9 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும்.

10 இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார். 12 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ? 13 அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 14 இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல.

மாற்கு 9:38–50

9:38 அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான்.

39 அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். 40 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான். 41 நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

42 என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.

43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். 44 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். 45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். 46 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.

47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும்.

48 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். 49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். 50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.

லூக்கா 9:49–50

9:49 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான்.

50 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.