பாவம் செய்யும் சகோதரனை எப்படி நடத்தி மன்னிக்க வேண்டும்

உனக்கு எதிராகப் பாவம் செய்த சகோதரனை நடத்துவதற்கான சரியான முறையும், ஒரு சகோதரனைப் பொறுமையுடன் மன்னிக்க வேண்டிய கடமையும் (இரக்கமற்ற ஊழியனின் உவமை).

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 18:15–35

18:15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16 அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ. 17 அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக. 18 உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 20 ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.

21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான். 22 அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 23 எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. 24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். 25 கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். 26 அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான். 27 அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். 28 அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். 29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். 30 அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான். 31 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். 32 அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

மேசியாவைப் பின்பற்றுகிறவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும்

மேசியாவைப் பின்பற்றுகிறவர்கள் அவருடைய ஊழியத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும்.

மத்தேயு 8:19–22

8:19 அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

20 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

21 அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.

22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.

லூக்கா 9:57–62

9:57 அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார்.

59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.

60 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார். 61 பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான். 62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.

இயேசு தமது சகோதரர்களின் ஆலோசனையை நிராகரிக்கிறார்

இயேசுவின் அவிசுவாசமுள்ள சகோதரர்கள், யூதேயாவில் தம்மை வெளிப்படுத்தும்படி அவரை வற்புறுத்துகிறார்கள்; அவர் அவர்களுடைய ஆலோசனையை நிராகரிக்கிறார்.

யோவான் 7:2–9

7:2 யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது. 3 அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும். 4 பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5 அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள். 6 இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது. 7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது. 8 நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். 9 இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.

இயேசு பிறர் அறியாமல் சமாரியா வழியாக எருசலேமுக்குச் செல்கிறார்

லூக்கா 9:51–56

9:51 பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து, 52 தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். 53 அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 54 அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள். 55 அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு, 56 மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.

யோவான் 7:10

7:10 அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.