பகுதி 7: சாலொமோனின் பாவம் (continued)

கி.மு. 980 முதல் 975 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரசங்கி 8–9

1 ஞானம் உள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் சம்பவத்தை அறிந்தவன் யார்? மனிதனுடைய ஞானம் அவனுடைய முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அவனுடைய முகத்தின் கோபம் மாறும். 2 ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு செய்த ஆணையின்படி இதைச் செய். 3 நீ அவனுடைய சமுகத்தைவிட்டு விலக அவசரப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாக நில்லாதே: அவன் தனக்கு விருப்பமானதெல்லாம் செய்வான். 4 ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்? 5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும். 6 எல்லாக் காரியத்திற்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனிதனுக்கு நேரிடும் கலக்கம் மிகுதி. 7 இன்னது நடக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாக நடக்கும் என்று அவனுக்கு சொல்லக்கூடியவன் யார்? 8 தன் ஆவியை விடாமல் இருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனிதனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கர்களைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது. 9 இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் சிந்தித்தேன்; ஒரு மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆளுகிற காலமும் உண்டு. 10 பரிசுத்த இடத்திற்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்செய்யப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே புகழப்பட்டார்கள்; இதுவும் மாயையே. 11 தீயசெயல்களுக்குத்தகுந்த தண்டனைச் சீக்கிரமாக நடவாதபடியால், மனிதர்களின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரம் கொண்டிருக்கிறது. 12 பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். 13 துன்மார்க்கனோ நன்றாக இருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாமல் இருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாட்கள் நீடித்திருப்பதுமில்லை. 14 பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமும் உண்டு; அதாவது, துன்மார்க்கர்களின் செய்கைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் செய்கைக்கு வருவதுபோல, துன்மார்க்கர்களுக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். 15 ஆகையால் நான் மகிழ்ச்சியைப் புகழ்ந்தேன்; சாப்பிடுவதும் குடிப்பதும் மகிழ்வதுமே தவிர சூரியனுக்குக்கீழே மனிதனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்கு கொடுத்த வாழ்நாளில் அவனுடைய பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே. 16 நான் ஞானத்தை அறியவும், மனிதன் இரவும் பகலும் கண்ணுக்கு தூக்கம் இல்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என்னுடைய மனதை செலுத்தினபோது, 17 தேவன் செய்யும் எல்லா செயல்களையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செய்கையை மனிதன் கண்டுபிடிக்கமுடியாதென்று கண்டேன். அதை அறியும்படி மனிதன் முயற்சித்தாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

9:1 இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான். 2 எல்லோருக்கும் எல்லாம் ஒரேவிதமாக நடக்கும்; நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், நல்லகுணமும் சுத்தமும் உள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாக நடக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாக நடக்கும். 3 எல்லோருக்கும் ஒரேவிதமாக நடக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீமை ஆகும்; ஆதலால் மனுமக்களின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாள்வரை அவர்களுடைய இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் மரித்து, இறந்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். 4 இதற்கு நீங்கலாக இருக்கிறவன் யார்? உயிரோடு இருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கை உண்டு; செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் சிறப்பானது. 5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் இறப்பதை அறிவார்களே, இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பெயர்கூட மறக்கப்பட்டிருக்கிறது. 6 அவர்களுடைய அன்பும், அவர்களுடைய பகையும், அவர்களுடைய பொறாமையும் ஒழிந்துபோனது; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறது ஒன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கு இல்லை. 7 நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார். 8 உன்னுடைய ஆடைகளை எப்பொழுதும் வெள்ளையாகவும், உன்னுடைய தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக. 9 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே செய்கிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. 10 செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 11 நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே பார்த்தது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு வீரர்களின் வீரம் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு அறிவில் தேறினவர்களின் அறிவும் போதாது; அவர்கள் எல்லோருக்கும் நேரமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். 12 தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

13 சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் பார்த்தேன்; அது என்னுடைய பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினது. 14 ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய முற்றுகைச் சுவரைக் கட்டினான். 15 அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. 16 ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன். 17 மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள். 18 யுத்த ஆயுதங்களைவிட ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.