பகுதி 7: சாலொமோனின் பாவம் (continued)

கி.மு. 980 முதல் 975 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரசங்கி 10–12

1 செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும். 2 ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். 3 மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான். 4 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். 5 நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே. 6 மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 7 வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன். 8 படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். 9 கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான். 10 இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம். 11 தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன். 12 ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். 13 அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும். 14 மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? 15 ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும். 16 ராஜா சிறுபிள்ளையுமாக, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ, 17 ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது. 18 மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும். 19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். 20 ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.

11:1 உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள் மூலமாக அனுப்பு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். 2 ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. 3 மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். 4 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான். 5 ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை. 6 காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.

7 வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்கு விருப்பமாகவும் இருக்கும். 8 மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே. 9 வாலிபனே! உன்னுடைய இளமையிலே சந்தோஷப்படு, உன்னுடைய வாலிப நாட்களிலே உன்னுடைய இருதயம் உன்னை மகிழ்ச்சியாக்கட்டும்; உன்னுடைய நெஞ்சின் வழிகளிலும், உன்னுடைய கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றிக்காகவும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறிந்துகொள். 10 நீ உன்னுடைய இருதயத்திலிருந்து கோபத்தையும், உன்னுடைய சரீரத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

12:1 நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்., 2 சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், இருளாகாமல் இருப்பதற்கு முன்னும், 3 மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதால் ஓய்ந்து, ஜன்னல் வழியாகப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், 4  எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும், 5 மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், 6 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, 7 இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை. 8 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். 9 மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் மக்களுக்கு அறிவைப் போதித்து, கவனமாகக் கேட்டு ஆராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். 10 இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். 11 ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. 12 என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. 13 காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே. 14 ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.