பகுதி 7: சாலொமோனின் பாவம் (continued)

கி.மு. 980 முதல் 975 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரசங்கி 6–7

1 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது. 2 அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது. 3 ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன். 4 அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயரும் மறைந்து போகும். 5 அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு. 6 அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா? 7 மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை. 8 இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன? 9 ஆசையானது அலைந்து தேடுகிறதைவிட கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதை கலங்கச் செய்கிறதுமாக இருக்கிறது. 10 இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது. 11 மாயையைப் பெருகச்செய்கிற அநேக காரியங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனிதர்களுக்குப் பயன் என்ன? 12 நிழலைப்போன்ற மாயையான தன்னுடைய வாழ்நாளை போக்கும் மனிதர்களுக்கு இந்த வாழ்வில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே நடக்கும் காரியம் இன்னதென்று மனிதனுக்கு அறிவிப்பவன் யார்?

7:1 விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும்,

ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது.

2 விருந்து வீட்டிற்குப் போவதைவிட துக்கவீட்டிற்குப் போவது நலம்;

இதிலே எல்லா மனிதர்களின் முடிவும் காணப்படும்;

உயிரோடு இருக்கிறவன் இதைத் தன்னுடைய மனதிலே சிந்திப்பான்.

3 சிரிப்பைவிட துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.

4 ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்;

மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும்.

5 ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும்,

ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.

6 மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்;

இதுவும் மாயையே.

7 இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்;

லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும்.

8 ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது;

பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன்.

9 உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே;

மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும்.

10 இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே;

நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.

11 பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது;

இதினாலே பலனுமுண்டு.

12 ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்;

ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்;

இதுவே அறிவின் மேன்மை.

13 தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்;

அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்?

14 வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு,

தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்;

மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி

தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார்.

15 இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்;

தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு,

தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு.

16 மிஞ்சின நீதிமானாக இருக்காதே, உன்னை அதிக ஞானியுமாகவும் ஆக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? 17 மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்? 18 நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாமல் இருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றிலிருந்தும் காக்கப்படுவான். 19 நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும். 20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யக்கூடிய நீதிமான் பூமியில் இல்லை. 21 சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே; கவனித்தால் உன்னுடைய வேலைக்காரன் உன்னை சபிப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். 22 அநேகமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்று, உன்னுடைய மனதிற்குத் தெரியுமே. 23 இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமானது. 24 தூரமும் மகா ஆழமுமாக இருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? 25 ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் தீமையையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என்னுடைய மனதைச் செலுத்தினேன். 26 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய பெண்ணானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். 27 காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாக விசாரணைசெய்து, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்: 28 என்னுடைய மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு மனிதனைக் கண்டேன்; இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு பெண்ணை நான் காணவில்லை. 29 இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன்.