பகுதி 7: சாலொமோனின் பாவம் (continued)

கி.மு. 980 முதல் 975 வரை

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரசங்கி 4–5

1 இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுபவர்கள் இல்லை; ஒடுக்குகிறவர்களிடம் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுபவர்கள் இல்லை. 2 ஆதலால் இன்னும் உயிரோடு இருந்து பிழைக்கிறவர்களைவிட முன்பே வெகுநாட்கள் வாழ்ந்து மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். 3 இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே. 4 மனிதன் படும் எல்லா பிரயாசமும், பயன்படும் எல்லா செயல்களும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாக இருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. 5 மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். 6 வருத்தத்தோடும் மனக்கலக்கத்தோடும் இரண்டு கைப்பிடிநிறையக் கொண்டிருப்பதைவிட, அமைதியாக ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம். 7 பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன். 8 ஒருவன் தனிமையாக இருக்கிறான்; அவனுக்கு யாருமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்திற்கு முடிவில்லை; அவனுடைய கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அனுபவிக்காமல் யாருக்காக பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை. 9 தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். 10 ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. 11 இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி? 12 ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.

13 இனி ஆலோசனையைக் கேட்காத வயதானவனும் மூடனுமாகிய ராஜாவைவிட, ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே சிறப்பானவன். 14 அரசாள சிறைச்சாலையிலிருந்து புறப்படுபவரும் உண்டு; ராஜகுலத்தில் பிறந்து ஏழையாவாரும் உண்டு. 15 சூரியனுக்குக்கீழே உயிருள்ளவர்கள் எல்லோரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையிடம் சார்ந்திருப்பதைக் கண்டேன். 16 அவர்களுக்குமுன்பு அப்படிச் செய்த மக்களின் எண்ணிக்கைக்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமுமாகவும் இருக்கிறது.

5:1 நீ தேவாலயத்திற்குப் போகும்போது உன்னுடைய நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைவிட கேட்டறிவதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாமல் இருக்கிறார்கள். 2 தேவ சமுகத்தில் நீ துணிகரமாக உன்னுடைய வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன்னுடைய வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக. 3 தொல்லையின் மிகுதியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் மிகுதியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். 4 நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை செய்துகொண்டால், அதைச் செலுத்தத் தாமதிக்காதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். 5 நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைவிட, நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே நலம். 6 உன்னுடைய சரீரத்தைப் பாவத்திற்குள்ளாக்க உன்னுடைய வாய்க்கு இடம்கொடுக்காதே; அது புத்திமாறி செய்தது என்று தூதனுக்குமுன்பு சொல்லாதே; தேவன் உன்னுடைய வார்த்தைகளினாலே கோபம் கொண்டு, உன்னுடைய கைகளின் செயல்களை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்? 7 அநேக சொப்பனங்கள் மாயையாக இருப்பதுபோல அநேக வார்த்தைகளும் மாயையாக இருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.

8 ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ கண்டால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாக இருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு. 9 பூமியில் விளையும் பலன் எல்லோருக்கும் உரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான். 10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. 11 பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன? 12 வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது. 13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். 14 அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை. 15 தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. 16 அவன் வந்தபடியே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்காக உழைத்ததால் அவனுக்கு லாபம் என்ன? 17 அவன் தன்னுடைய நாட்களிலெல்லாம் இருளிலே சாப்பிட்டு, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான். 18 இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. 19 தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி. 20 அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு தயவு செய்கிறபடியினால், அவன் தன்னுடைய உயிருள்ள நாட்களை அதிகமாக நினைக்கமாட்டான்.