பகுதி 6: சவுலின் ஆட்சி
சவுல் இஸ்ரவேலுக்கு அரசனாக்கப்படுகிறார்
கி.மு. 1095
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 பென்யமீன் கோத்திரத்தார்களில் கீஸ் என்னும் பெயருள்ள, செல்வாக்குள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் மகனான அபீயேலின் மகன். 2 அவனுக்குச் சவுல் என்னும் பெயருள்ள மிகவும் அழகான வாலிபனான ஒரு மகன் இருந்தான்; இஸ்ரவேல் மக்களில் அவனை விட அழகுள்ளவன் இல்லை; எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தனர். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான். 3 சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். 4 அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டைக் கடந்தும் அவைகளைக் காணவில்லை. 5 அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடித் திரும்பிப்போவோம் வா என்றான். 6 அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். 7 அப்பொழுது சவுல் தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போனது; தேவனுடைய மனிதனாகிய அவருக்குக் கொண்டு போவதற்குரிய காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான். 8 அந்த வேலைக்காரன் மறுபடியும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனிதன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படி, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். 9 முற்காலத்தில் இஸ்ரவேலில் தேவனிடத்தில் விசாரிக்கப்போகிற எவனும் ஞானதிருஷ்டிக்காரனிடம் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்த நாளிலே தீர்க்கதரிசி எனப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான். 10 அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள். 11 அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாக ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். 12 அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; சீக்கிரமாகப் போங்கள்; இன்றைக்கு மக்கள் மேடையில் பலியிடுகிறதினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். 13 நீங்கள் பட்டணத்திற்குள் நுழைந்தவுடனே, அவர் மேடையின்மேல் சாப்பிடப் போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வரும்வரை மக்கள் சாப்பிடமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள்; உடனே போங்கள்; இந்த நேரத்திலே அவரைக் காணலாம் என்றார்கள். 14 அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான். 15 சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே யெகோவா சாமுவேலின் காது கேட்கும்படி: 16 நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினதால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். 17 சாமுவேல் சவுலைக் கண்டபோது, யெகோவா அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார். 18 சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். 19 சாமுவேல் சவுலுக்குப் பதிலாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடு சாப்பிடவேண்டும்; நாளைக்காலை நான் உன்னுடைய இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். 20 மூன்று நாளைக்கு முன்னே காணாமல்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதைத் தவிர எல்லா இஸ்ரவேலின் விருப்பம் யாரை நாடுகிறது? உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா? என்றான். 21 அப்பொழுது சவுல் பதிலாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்னுடைய குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வது ஏன் என்றான். 22 சாமுவேல் சவுலையும் அவனுடைய வேலைக்காரனையும் உணவு அறைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய 30 பேராக இருந்தார்கள். 23 பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன்னுடைய கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான். 24 அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன்பாக வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்காக வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் மக்களை விருந்திற்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடு சாப்பிட்டான். 25 அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவனுடைய மேல்வீட்டிலே சவுலோடு பேசிக்கொண்டிருந்தான். 26 அவர்கள் அதிகாலை கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். 27 அவர்கள் பட்டணத்தின் கடைசிவரை இறங்கிவந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படி, நீ சற்று இங்கே நில் என்றான்.
10:1 அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: யெகோவா உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா? 2 நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையான செல்சாகில் ராகேலின் கல்லறைக்கு அருகில் இரண்டு மனிதர்களைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளைப்பற்றிய கவலையைவிட்டு, உங்களுக்காக கவலைப்பட்டு, என் மகனுக்காக என்ன செய்வேன்? என்கிறான் என்று சொல்வார்கள். 3 நீ அந்த இடத்தைவிட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியிலே சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனிதர்கள் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சை ரசமுள்ள ஒரு தோல்பையும் கொண்டுவந்து, 4 உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும். 5 பின்பு பெலிஸ்தர்களின் முகாம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் வரும்போது, மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தைச் சந்திப்பாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். 6 அப்பொழுது யெகோவாவுடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனிதனாவாய். 7 இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, நேரத்திற்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடு இருக்கிறார். 8 நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படி, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்கும்வரை, ஏழு நாட்கள் காத்திரு என்றான்.
9 அவன் சாமுவேலைவிட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நடந்தது. 10 அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். 11 அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லோரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்கிறதைப் பார்த்தபோது: கீசின் மகனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டார்கள். 12 அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியானது. 13 அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான். 14 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவனுடைய வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்கும் காணாததால், சாமுவேலிடத்திற்குப் போனோம் என்றான். 15 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான். 16 சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று எங்களுக்கு வெளிப்படையாக சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்ஜிய காரியத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.
17 சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் வரவழைத்து, 18 இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த, உங்களை எகிப்தியர்களின் கைக்கும், உங்களைத் துன்பப்படுத்தின எல்லா ராஜாக்களின் கைக்கும் மீட்டுவிட்டேன். 19 நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான். 20 சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் அருகில் வரச்செய்தபின்பு பென்யமீனின் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது. 21 அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படி அருகில் வரச்செய்தபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் மகனான சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் காணவில்லை. 22 அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் பொருட்கள் வைக்கிற இடத்திலே ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று யெகோவா சொன்னார். 23 அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் மக்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தார்கள். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான். 24 அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் பார்த்து: யெகோவா தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், எல்லா மக்களுக்குள்ளும் அவனுக்குச் சமமானவன் இல்லை என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். 25 சாமுவேல் ராஜ்ஜிய முறையை மக்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதி, யெகோவாவுக்கு முன்பாக வைத்து, மக்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். 26 சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதைத் தூண்டினாரோ, அவர்களும் அவனோடு போனார்கள். 27 ஆனாலும் சில பயனற்ற மக்கள்: இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைசெய்தார்கள்; அவனோ காது கேட்காதவனைப்போல இருந்தான்.