சவுலின் போர்கள்

கி.மு. 1095

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

1 சாமுவேல் 11–13

1 அந்தக் காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றுகையிட்டான்; அப்பொழுது யாபேசின் மனிதர்கள் எல்லோரும் நாகாசை நோக்கி: எங்களோடு உடன்படிக்கைசெய்துகொள்; அப்பொழுது உமக்கு பணிவிடை செய்வோம் என்றார்கள். 2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரசெய்வதே நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை என்றான். 3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் தூதுவர்களை அனுப்பும்படியாக, ஏழு நாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை காப்பாற்றுகிறவர்கள் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.

4 அந்தத் தூதுவர்கள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, மக்களின் காது கேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது மக்களெல்லோரும் சத்தமிட்டு அழுதார்கள். 5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, மக்கள் அழுகிற காரணம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனிதர்கள் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள். 6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால் அவன் மிகவும் கோபப்பட்டு, 7 அவன் இரண்டு எருதுகளைப் பிடித்து, துண்டித்து அந்தத் தூதுவர்களின் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுல் மற்றும் சாமுவேலின் பின்செல்லாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படியே செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது யெகோவாவால் உண்டான பயங்கரம் மக்களின்மேல் வந்ததால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள். 8 அவர்களைப் பேசேக்கிலே கணக்கிட்டுப் பார்த்தான்; இஸ்ரவேல் மக்களில் மூன்று லட்சம்பேரும், யூதா மனிதர்களில் முப்பதாயிரம்பேரும் இருந்தார்கள். 9 அங்கே வந்த தூதுவர்களை அவர்கள் பார்த்து: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு மீட்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனிதர்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; தூதுவர்கள் வந்து யாபேசின் மனிதர்களிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். 10 பின்பு யாபேசின் மனிதர்கள்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் விருப்பத்தின்படி எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள். 11 மறுநாளிலே சவுல் மக்களை மூன்று படைகளாக பிரித்து, விடியற்காலையில் முகாமிற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியர்களை முறியடித்தான்; தப்பினவர்களில் இருவர் இருவராக சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லோரும் சிதறிப்போனார்கள். 12 அப்பொழுது மக்கள் சாமுவேலைப் பார்த்து: சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனிதனை நாங்கள் கொல்லும்படி ஒப்புக்கொடுங்கள் என்றார்கள். 13 அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படக்கூடாது; இன்று யெகோவா இஸ்ரவேலர்களுக்கு மீட்பைக் கொடுத்தார் என்றான். 14 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜாவை ஏற்படுத்துவோம் வாருங்கள் என்றான். 15 அப்படியே மக்கள் எல்லோரும் கில்காலுக்குப் போய், அந்த இடத்திலே யெகோவாவுக்கு முன்பாக சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே யெகோவாவுக்கு முன்பாக சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

12:1 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர்கள் அனைவரையும் பார்த்து: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். 2 இப்போதும் இதோ, ராஜா உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவருகிறார்; நானோ முதிர்வயதானவனும் நரைத்தவனுமானேன்; என்னுடைய மகன்கள் உங்களோடிருப்பார்கள்; நான் என்னுடைய சிறுவயதுமுதல் இந்த நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன். 3 இதோ, நான் இருக்கிறேன்; யெகோவாவுக்கு முன்பாகவும் அவர் அபிஷேகம்செய்து வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயம்செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குருடனாக இருந்தேன்? சொல்லுங்கள்; அப்படி இருக்குமானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். 4 அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயம் செய்யவும் இல்லை; எங்களுக்கு தீங்கு செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். 5 அதற்கு அவன்: நீங்கள் என்னுடைய கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சியாக இருக்கிறார்; அவர் அபிஷேகம்செய்தவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். 6 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: மோசே, ஆரோனை, ஏற்படுத்தியவரும், உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் யெகோவாவே. 7 இப்பொழுதும் யெகோவா உங்களுக்கும் உங்களுடைய முற்பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான செய்கைகளைக்குறித்தும், நான் யெகோவாவுக்கு முன்பாக உங்களோடு நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். 8 யாக்கோபு எகிப்திற்கு போயிருக்கும்போது, உங்கள் முன்னோர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டார்கள், அப்பொழுது யெகோவா மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த இடத்திலே குடியிருக்கச்செய்தார்கள். 9 அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் படைத்தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தர்களின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்தார்கள். 10 ஆகையால் அவர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டு: நாங்கள் யெகோவாவை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினாலே, பாவம்செய்தோம்; இப்போதும் எங்கள் எதிரிகளின் கைக்கு எங்களை மீட்டுவிடும்; இனி உம்மை வழிபடுவோம் என்றார்கள். 11 அப்பொழுது யெகோவா யெருபாகாலையும், பேதானையும், யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிச் சுற்றிலும் இருந்த உங்கள் எதிரிகளின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார். 12 அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாக வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்கு ராஜாவாக இருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். 13 இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். 14 நீங்கள் யெகோவாவுடைய வாக்குக்கு விரோதமாகக் கலகம்செய்யாமல் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு பணிவிடைசெய்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள். 15 நீங்கள் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், யெகோவாவுடைய வாக்குக்கு எதிராக கலகம் செய்தால், யெகோவாவுடைய கை உங்கள் முன்னோர்களுக்கு எதிராக இருந்ததுபோல உங்களுக்கும் எதிராக இருக்கும். 16 இப்பொழுது யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். 17 இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், யெகோவாவின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, 18 சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே யெகோவா இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; 19 சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடி உம்முடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோம் என்று மக்கள் எல்லோரும் சொன்னார்கள். 20 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் யெகோவாவை விட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள். 21 பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே. 22 யெகோவா உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், யெகோவா தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார். 23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். 24 நீங்கள் எப்படியும் யெகோவாவுக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 25 நீங்கள் இன்னும் தீங்கையே செய்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் அழிந்துபோவீர்கள் என்றான்.

13:1 சவுல் அரசாட்சி செய்து, ஒரு வருடமானது; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருடம் அரசாண்டபோது, 2 இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்காகத் தெரிந்துகொண்டான்; அவர்களில் 2,000 பேர் சவுலோடு மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், 1,000 பேர் யோனத்தானோடு பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற மக்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். 3 யோனத்தான் கேபாவிலே முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களை முறியடித்தான்; பெலிஸ்தர்கள் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகவே, இதை எபிரெயர்கள் கேட்கட்டும் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதச்செய்தான். 4 முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களைச் சவுல் முறியடித்தான் என்றும், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, மக்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். 5 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய 30,000 இரதங்களோடும், 6,000 குதிரைவீரரோடும், கடற்கரை மணலைப்போல எண்ணற்ற மக்களோடும் கூடிவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே முகாமிட்டார்கள். 6 அப்பொழுது இஸ்ரவேலர்கள் தங்களுக்கு உண்டான இக்கட்டை பார்த்தபோது, மக்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், கிணறுகளிலும், குகைகளிலும் ஒளிந்துகொண்டார்கள். 7 எபிரெயர்களில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; எல்லா மக்களும் பயந்து அவனுக்குப் பின்சென்றார்கள். 8 அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்வரை காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, மக்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். 10 அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிக்கிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வரவேற்க அவனுக்கு எதிராக போனான். 11 நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: மக்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாளில் நீர் வராததையும், பெலிஸ்தர்கள் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் பார்த்ததினால், 12 கில்காலில் பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாக வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் யெகோவாவுடைய இரக்கத்தைத் தேடவில்லை என்றும் நினைத்துத் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். 13 சாமுவேல் சவுலைப் பார்த்து: முட்டாள் தனமாக செய்தீர்; உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; கைக்கொண்டிருந்தால் யெகோவா இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்ஜியத்தை என்றென்றும் உறுதிப்படுத்துவார். 14 இப்போதோ உம்முடைய ஆட்சி நிலைநிற்காது; யெகோவா தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தமக்குத் தேடி, அவனைக் யெகோவா தம்முடைய மக்கள்மேல் தலைவனாக இருக்கக் கட்டளையிட்டார்; யெகோவா உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். 15 சாமுவேல் எழுந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடு இருக்கிற மக்களைக் கணக்கெடுக்கிறபோது, ஏறக்குறைய 600 பேர் இருந்தார்கள். 16 சவுலும் அவனுடைய மகனான யோனத்தானும் அவர்களோடு இருக்கிற மக்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள். 17 கொள்ளைக்காரர்கள் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து மூன்று படைகளாகப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போனது. 18 வேறொரு படை பெத்தொரோன் வழியாகப் போனது; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாகப் போனது. 19 எபிரெயர்கள் பட்டயங்களையும் ஈட்டிகளையும் உண்டாக்காதபடிப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர்கள் சொல்லியிருந்ததால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. 20 இஸ்ரவேலர்கள் அனைவரும் அவரவர் தங்கள் கலப்பைகளின் இரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு, பெலிஸ்தர்களிடத்திற்குப் போகவேண்டியதாக இருந்தது. 21 கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், மூன்று கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், கதிர் அரிவாளையும் கூர்மையாக்குவதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. 22 யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவனுடைய மகனான யோனத்தானையும் தவிர, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற மக்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாமல் இருந்தது. 23 பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.