சாமுவேல் இஸ்ரவேலை ஆளுகிறார்
கி.மு. 1116
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாட்கள் தங்கியிருந்தது; 20 வருடங்கள் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தார்கள் எல்லோரும் யெகோவா வை நினைத்து, அழுதுகொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார்கள் அனைவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்பினால், அந்நிய தெய்வங்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் யெகோவாவிடம் திருப்பி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தர்களுடைய கைகளுக்கு விடுவிப்பார் என்றான். 4 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, யெகோவா ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள். 5 பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் யெகோவாவிடம் மன்றாடும்படி, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் மிஸ்பாவிலே கூடிவரச்செய்யுங்கள் என்றான். 6 அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். 7 இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் மக்கள் கேட்டு, பெலிஸ்தர்களினிமித்தம் பயந்து, 8 சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களைப் பெலிஸ்தர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படி, எங்களுக்காக அவரை நோக்கி இடைவிடாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள். 9 அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் யெகோவாவை நோக்கி வேண்டிக்கொண்டான்; யெகோவா அவனுக்கு பதில் அருளினார். 10 சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; யெகோவா மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள்மேல் அந்த நாளிலே முழங்கச்செய்து, அவர்களைக் கலங்கடித்ததால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டு மடிந்தார்கள். 11 அப்பொழுது இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குவரை அவர்களை முறியடித்தார்கள். 12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இதுவரை யெகோவா எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான். 13 இப்படியாக பெலிஸ்தர்கள் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடித் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் யெகோவாவுடைய கை பெலிஸ்தர்களுக்கு எதிராக இருந்தது. 14 பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவங்கிக் காத்வரை உள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்கள் கையில் இல்லாதபடி, திருப்பிக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியர்களுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது. 15 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 16 அவன் ஒவ்வொரு வருடமும் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அந்த இடங்களில் எல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தப்பின்பு, 17 அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
8:1 சாமுவேல் முதிர்வயதானபோது, தன் மகன்களை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். 2 அவனுடைய மூத்தமகனின் பெயர் யோவேல், இளையமகனின் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாக இருந்தார்கள். 3 ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். 4 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் கூட்டம்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து: 5 இதோ, நீர் முதிர்வயதானீர்; உம்முடைய மகன்கள் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் எல்லா ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்க, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். 6 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தவறானதாக தோன்றினது; ஆகையால் சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தான். 7 அப்பொழுது யெகோவா சாமுவேலை நோக்கி: மக்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடி, என்னைத்தான் தள்ளினார்கள். 8 நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்த நாள்வரை அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களை ஆராதித்துவந்த தங்கள் எல்லாச் செயல்களின்படி செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். 9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் விருப்பத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் விதம் என்னவென்று அவர்களுக்கு வலியுறுத்தி தெரியப்படுத்து என்றார். 10 அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட மக்களுக்குக் யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: 11 உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன்னுடைய ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் மகன்களை எடுத்து, தன்னுடைய ரதங்களை ஓட்டுபவர்களாகவும் தன்னுடைய குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். 12 1,000 பேருக்கும் 50 பேருக்கும் தலைவராகவும், தன்னுடைய நிலத்தை உழுகிறவர்களாகவும், தன்னுடைய விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன்னுடைய யுத்த ஆயுதங்களையும் தன்னுடைய ரதங்களின் உபகரணங்களையும் செய்கிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். 13 உங்கள் மகள்களைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்செய்கிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். 14 உங்களுடைய வயல்களிலும், உங்களுடைய திராட்சை தோட்டங்களிலும், உங்களுடைய ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன்னுடைய ஊழியக்காரர்களுக்குக் கொடுப்பான். 15 உங்களுடைய தானியத்திலும் உங்களுடைய திராட்சை பலனிலும் தசமபாகம் வாங்கி, தன்னுடைய அதிகாரிகளுக்கும் தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கொடுப்பான். 16 உங்களுடைய வேலைக்காரர்களையும், உங்களுடைய வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபர்களையும், உங்களுடைய கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். 17 உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். 18 நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினால் அந்த நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் யெகோவா அந்த நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். 19 மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனம் இல்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். 20 எல்லா மக்களையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள். 21 சாமுவேல் மக்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் யெகோவாவிடத்தில் தெரியப்படுத்தினான். 22 யெகோவா சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: அவரவர்கள் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.