பவுலின் தரிசனங்களும் வெளிப்பாடுகளும்
அவர்களுக்காகத் தாம் பெருமைபாராட்டக் கட்டாயப்படுத்தப்பட்டால், தாம் பெற்ற வெளிப்பாடுகளையும் தரிசனங்களையும் குறித்துப் பெருமைபாராட்டுவதாகப் பவுல் கூறுகிறார். தம்மைப் பொறுத்தவரை, தமது பலவீனத்தையும் துன்பங்களையும் குறித்து மட்டுமே பெருமைபாராட்டத் தீர்மானித்திருக்கிறார். முற்றிலும் உண்மையானவற்றைக் கூறிப் பெருமைபாராட்ட முடிந்தாலும், யாரும் தம்மைப் பற்றி அளவுக்கு மீறிய உயர்ந்த எண்ணம் கொள்ளாதபடி அதிலிருந்து விலகியிருக்கிறார்.
கி.பி. 58
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். 2 கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். 3 அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன். 4 அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். 5 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன். 6 சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.
பலவீனத்தில் பூரணமாகும் தேவனுடைய வல்லமை
பிரிவினைக் குழுவினர் தம்மை நிந்திக்கக் காரணமாக இருந்த தமது உடல் நோவு, தமக்கு அருளப்பட்ட மகிமையான வெளிப்பாடுகளால் தாம் அளவுக்கு மீறிப் பெருமிதம் கொள்ளாதபடி தேவனால் அனுப்பப்பட்டது என்று பவுல் உறுதிப்படுத்துகிறார். தமது பலவீனத்தினூடே தேவனுடைய வல்லமை பூரணமாவதால், அது நீக்கப்பட வேண்டியதல்ல. இதனாலேயே துன்புறுத்தல்கள், பலவீனங்கள் போன்றவற்றில் அவர் மகிழ்கிறார்; ஏனெனில், தமது பலவீனத்தின் அளவுக்கேற்பத் தமக்குள் வாழும் தேவனுடைய கிருபை தமக்கு வலிமை அளிக்கிறது. கொரிந்தியர்களின் நடத்தை தமது விருப்பத்திற்கு மாறாகப் பெருமைபாராட்ட அவரைக் கட்டாயப்படுத்தியுள்ளது. மிகச் சிறந்த அப்போஸ்தலர்களைவிட அவர் எந்த விதத்திலும் குறைந்தவரல்ல என்பதை அறிந்திருந்த அவர்கள், அவருடைய அப்போஸ்தலத்துவத்தை ஆதரித்திருக்க வேண்டும்.
7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. 8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். 10 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11 மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
பவுலின் வரவிருக்கும் சந்திப்பும் அவருடைய அச்சங்களும்
தமது அற்புதங்களையும் அவர்களுக்குக் கொடுத்த ஆவிக்குரிய வரங்களையும் கொண்டு பவுல் தமது அப்போஸ்தலத்துவத்தைத் தொடர்ந்து நிலைநாட்டுகிறார். தாம் அவர்களுக்குப் பாரமாக இருக்கவில்லை என்பதைத் தவிர, வேறு எந்த விதத்தில் அவர்களை மற்ற சபைகளைவிடக் குறைவாக நடத்தினார் என்று கேட்கிறார். அவர்களைச் சந்திக்கவும், அப்போதும் அவர்களுக்குப் பாரமாக இல்லாதிருக்கவும் தாம் எண்ணியிருப்பதாக அறிவிக்கிறார். ஏனெனில், அவர்களுடைய ஆவிக்குரிய தந்தையாகத் தாம் நாடுவது தமது ஆவிக்குரிய பிள்ளைகளின் உடைமைகளை அல்ல, அவர்களுடைய இரட்சிப்பையே. தீத்துவும் அவருடைய உதவியாளரும் சுயநலமின்றி நடந்துகொண்டதைச் சுட்டிக்காட்டி, அவர்களிடமிருந்து பணம் பெறத் தாம் தந்திரமாக மறுத்ததாக எதிரிகள் மறைமுகமாகக் கூறுவதை மறுக்கிறார். தாமே வராததற்கு ஒரு சாக்காக அல்ல (2 கொரிந்தியர் 1:23), கீழ்ப்படியாதவர்கள் தங்கள் வாழ்க்கையைத் திருத்திக்கொள்ள நேரம் கொடுக்கவே தீத்துவை அவர்களிடம் அனுப்பியதாக உறுதிப்படுத்துகிறார். தாம் அவர்களைச் சந்திக்கும்போது, தாங்கள் செய்த பாவங்களையும் அசுத்தமான செயல்களையும் குறித்து மனந்திரும்பாதவர்களுக்காகத் துக்கப்படவும் அவர்களைத் தண்டிக்கவும் வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறார்.
12 அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே. 13 எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள். 14 இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். 15 எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 16 அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். 17 நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா? 18 தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா? 19 நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம். 20 ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்; 21 மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.
பாவம் செய்கிறவர்களைப் பவுல் தண்டிக்காமல் விடமாட்டார்
பவுல் அடுத்த முறை கொரிந்தியர்களிடம் வரும்போது, நியாயப்பிரமாணத்தின்படியும் நற்செய்தியின்படியும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று தொடர்ந்து உறுதியளிக்கிறார். தாம் முன்பு விடுத்த எச்சரிக்கையையும், நெருங்கிய உறவினருடன் தகாத பாலுறவில் ஈடுபட்ட மனிதனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறார். ஏற்கெனவே பாவம் செய்தவர்கள் அனைவரையும், தொடர்ந்து பாவம் செய்பவர்கள் அனைவரையும் தாம் தண்டிக்காமல் விடப்போவதில்லை என்று உறுதியளிக்கிறார். குறிப்பாக, கிறிஸ்து தம் மூலமாகப் பேசுகிறார் என்பதற்கு அவர்கள் சான்று கேட்பதால் இவ்வாறு கூறுகிறார்; பவுல் செய்யும்படி கிறிஸ்து அருளிய வல்லமையான செயல்கள் வழியாக, அவர் ஏற்கெனவே பவுலின் மூலம் தம்மை பலவீனத்தோடு அல்ல, வல்லமையோடு வெளிப்படுத்தியிருக்கிறார். கிறிஸ்து தமது மனித இயல்பின் பலவீனத்தில் சிலுவையில் அறையப்பட்டாலும், தேவனுடைய வல்லமையால் இன்னும் உயிரோடிருக்கிறார். நாமும் அவரோடு உடலில் பலவீனமுள்ளவர்களாக இருக்கிறோம்; ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையில் வெளிப்படும் தேவனுடைய வல்லமையால் தாங்கள் அவரோடு உயிர்வாழ்வதைப் பவுல் காட்டுவார்.
1 மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும். 2 நான் இரண்டாம்முறை உங்களோடு இருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரத்தில் இருந்தும் உங்களிடம் இருக்கிறவனாக, நான் மீண்டும் வந்தால் தப்பவிடமாட்டேன் என்று முன்பு பாவம் செய்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன். 3 கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார். 4 ஏனென்றால், அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராக இருந்தும், உங்களிடம் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவரோடு பிழைத்திருப்போம்.
தங்களைச் சோதித்தறியும்படி கொரிந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
கிறிஸ்து பவுலோடு இருக்கிறார் என்பதற்கு அந்தப் பிரிவினர் சான்று கேட்டதால், கிறிஸ்துவின் பிரசன்னத்தை நிரூபிக்கும் ஆவிக்குரிய வரங்கள் தங்களிடம் இருக்கின்றனவா என்று தங்களைச் சோதித்தறியும்படி அவர் இப்போது அவர்களை அழைக்கிறார். அவர்களிடம் இந்தச் சான்று இல்லாமற்போனாலும், தாம் வரும்போது அவர்களைத் தண்டிக்க இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், தம்மிடம் அவை குறைவுபடாது என்பது தெரியவரும் என்று அவர் நம்புகிறார். தமது சான்றுகளைப் பயன்படுத்தித் தமது வல்லமையைக் காட்டும் வாய்ப்பைவிட, அவர்கள் மனந்திரும்புவதையே அவர் மிகவும் விரும்புவதால், அவர்கள் நேர்மையாக நடந்துகொள்ளும்படி தேவனிடம் வேண்டுகிறார். இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமைகளைச் சத்தியத்திற்கு ஆதரவாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உறுதிப்படுத்துகிறார். சபையைக் கட்டியெழுப்புவதற்காகத் தமக்குக் கொடுக்கப்பட்ட அற்புத வல்லமைகளை, தாம் அவர்களோடு இருக்கும்போது கடுமையாகப் பயன்படுத்த வேண்டியிராதபடி, அவர்கள் பூரணமடைவதற்காகப் பவுல் இவற்றை எழுதுகிறார்.
5 நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது. 6 நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 7 மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாமல் இருக்கும்படியாக, தேவனை நோக்கி வேண்டுதல்செய்கிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்கள் என்று தெரிவதற்காக இல்லை, நாங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்கள்போல இருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்படியே வேண்டுதல்செய்கிறேன். 8 சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும். 9 நாங்கள் பலவீனமுள்ளவர்களும் நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருக்கும்போது சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் பூரணர்களாகும்படி வேண்டுதல்செய்கிறோம். 10 ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன்.
பவுலின் பிரியாவிடையும் ஆசீர்வாதமும்
அந்தப் பிரிவினருக்கான தமது கண்டனங்களை முடித்தபின், பவுல் முழுச் சபையையும் நோக்கிப் பேசி, பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார். வாழ்த்துக்களுடனும், ஓர் அப்போஸ்தலராகத் தமது ஆசீர்வாதத்துடனும் முடிக்கிறார்.
11 கடைசியாக, சகோதரர்களே, சந்தோஷமாக இருங்கள், பூரணராக நாடுங்கள், ஆறுதல் அடையுங்கள்; ஒரே சிந்தையாக இருங்கள், சமாதானமாக இருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்திற்கும் காரணராகிய தேவன் உங்களோடு இருப்பார். 12 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். 13 பரிசுத்தவான்கள் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
பவுல் கொரிந்துவிலிருந்து மக்கெதோனியாவுக்குத் திரும்புகிறார்
பவுல் தமது தோழர்களைத் துரோவாவுக்கு முன்னதாக அனுப்பிவிட்டு, அகாயாவிலிருந்தும் கொரிந்துவிலிருந்தும் மக்கெதோனியாவுக்குத் திரும்புகிறார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:4–5
4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டைச்சேர்ந்த தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் துணைக்கு வந்தார்கள். 5 இவர்கள் எங்களுக்கு முன்னால் சென்று, துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.